வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் சோதனை... வெற்றி !: 'ககன்யான்' திட்டத்தில் இஸ்ரோவும் அசத்தல்
வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் சோதனை... வெற்றி !: 'ககன்யான்' திட்டத்தில் இஸ்ரோவும் அசத்தல்
ADDED : ஆக 25, 2025 12:14 AM

புதுடில்லி,: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் ஏவுகணை சோதனையை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இதே போல், 'ககன்யான்' திட்டத்தில், வேக குறைப்பு அமைப்பின் முதல் ஒருங்கிணைந்த சோதனையையும், 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும் வான் பாதுகாப்பு அமைப்பு மிக மிக அவசியம். போர்க்காலங்களில் எதிரி நாடுகள் ஏவும், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றை இடைமறித்து தாக்க இந்த அமைப்பு உதவுகிறது.
உலகிலேயே சக்தி வாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பாக, மேற்காசிய நாடான இஸ்ரேலின், 'அயர்ன் டோம்' கருதப்படுகிறது.
ஹமாஸ் பயங்கரவாதிகள், ஈரான், லெபனான், ஏமன் என பல முனை தாக்குதல்கள் இருந்த போதும், அவற்றை சிறப்பாக எதிர்கொண்டு, இஸ்ரேலின் அயர்ன் டோம் சக்கைப்போடு போடுகிறது.
ரஷ்யாவின், எஸ் - 400 வான் பாதுகாப்பு அமைப்பை நம் நாடு பயன்படுத்தி வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான சமீபத்திய சண்டையில், அந்நாட்டின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததில், எஸ் - 400 வான் பாதுகாப்பு அமைப்பு முக்கிய பங்காற்றியது.
நாட்டின், 79வது சுதந்திர தினத்தையொட்டி, கடந்த 15ல், டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 'சுதர்சன சக்ரா என்ற பெயரில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு கவசம், அடுத்த 10 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும்' என்றார்.
இந்நிலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் ஏவுகணை சோதனையை, டி.ஆர்.டி.ஓ., வெற்றிகரமாக நடத்தி உள்ளது.
எதிரியின் பீரங்கியை துரிதமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை, மிகக் குறுகிய துார வான் பாதுகாப்பு அமைப்பு ஏவுகணை மற்றும் உயர் சக்தி லேசர் அடிப்படையில் நேரடியாக தாக்கும் ஆயுதம் உள்ளிட்ட பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை, ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு கொண்டுள்ளது.
வான்வழி தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், இது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சமூக வலைதளத்தில் டி.ஆர்.டி.ஓ., வெளியிட்ட பதிவில், 'ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் ஏவுகணை சோதனை, கடந்த 23ம் தேதி பகல் 12:30 மணிக்கு ஒடிஷாவில் வெற்றிகரமாக நடந்தது.
'உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த அமைப்பு, பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை கொண்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.ஆர்.டி.ஓ.,வுக்கு பாராட்டு தெரிவித்து, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:
ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய டி.ஆர்.டி.ஓ.,வுக்கு பாராட்டுகள். இதற்காக பாடுபட்ட டி.ஆர்.டி.ஓ., ஆயுதப் படைகள் மற்றும் தொழில் துறைக்கு வாழ்த்துகள்.
இந்த தனித்துவமான சோதனை, நம் நாட்டுக்கு பல அடுக்கு வான் பாதுகாப்பு திறனை நிறுவிஉள்ளது. எதிரியின் வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிரான நம் பாதுகாப்பை இது வலுப்படுத்தப் போகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.