பீஹாரில் தேஜ கூட்டணி அமோக வெற்றி; ஓட்டுத்திருட்டு புகார் துாள்துாள்!
பீஹாரில் தேஜ கூட்டணி அமோக வெற்றி; ஓட்டுத்திருட்டு புகார் துாள்துாள்!
UPDATED : நவ 14, 2025 10:17 PM
ADDED : நவ 14, 2025 10:59 AM

நமது சிறப்பு நிருபர்
பீஹார் தேர்தலில் தேஜ கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 202 தொகுதிகளை கைப்பற்றியது. இண்டி கூட்டணி கட்சிகள், முந்தைய தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களை கணிசமாக இழந்துள்ளன. ராகுல் தெரிவித்த ஓட்டுத்திருட்டு புகார், இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் துாள் துாளாகியுள்ளது.
பீஹார் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டமாக நடந்த தேர்தலில் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த தேர்தலில் தேஜ கூட்டணி ஒரு அணியாகவும், இண்டி கூட்டணி ஒரு அணியாகவும் போட்டியிட்டன. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தனியாக அனைத்து தொகுதியிலும் போட்டியிட்டது.
பீஹார் சட்டசபையில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன. தனிப்பெரும்பான்மைக்கு 122 இடங்கள் மட்டும் போதுமானது.
தேஜ கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ( பாஜ -89, ஐஜத-85, லோக் ஜனசக்தி -19, ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா-5 அடக்கம்)
இண்டி கூட்டணி கட்சிகள், கடந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்ற இடங்களையும் இழந்துள்ளன. வெறும் 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று்ளன. அதில்( ஆர்ஜேடி -25, காங்கிரஸ் -6, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா -4) அடங்கும்) ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மற்ற கட்சிகள் 6 இடங்களில் வெற்றி பெற்றன.
பீஹார் மாநில தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல், ஓட்டுத்திருட்டு புகாரை பெரிதாக முன்னிலைப்படுத்தினார். லட்சக்கணக்கான வாக்காளர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது. எனினும், ராகுல் அந்த புகார்களை தொடர்ந்து தெரிவித்து வந்தார். அவர் தெரிவித்த புகார்களை, பீஹார் மாநில வாக்காளர்கள் பொருட்படுத்தவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுவதாக உள்ளன என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

