அவசர வழக்கு கோரிக்கை: சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு; இன்று முதல் அமலாகிறது
அவசர வழக்கு கோரிக்கை: சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு; இன்று முதல் அமலாகிறது
UPDATED : ஆக 11, 2025 07:28 AM
ADDED : ஆக 11, 2025 03:13 AM

புதுடில்லி : உச்ச நீதிமன்றத்தில் இனி தலைமை நீதிபதி முன், அவசர வழக்காக இம்மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை மூத்த வழக்கறிஞர்கள் முன்வைக்கக் கூடாது. இளம் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் தினசரி கூடும்போது, அன்றைய நாளில் விசாரிக்கப்படும் வழக்குகள் பட்டியலிடப்படும்.
அப்போது விசாரணைக்கு வராத வழக்குகள் குறித்து தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில், மூத்த வழக்கறிஞர்கள் வாய்மொழியாக தெரிவிப்பர். மேலும், அவசர தன்மையை பொறுத்து, பட்டியலிடப்படாத மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு கோரிக்கை வைப்பர்.
இந்த வழக்கத்தை, முந்தைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மாற்றி அமைத்தார். வாய்மொழியாக கோரிக்கை வைப்பதற்கு பதிலாக மின்னஞ்சல் அல்லது எழுத்துப்பூர்வ கடிதம் வாயிலாக தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த மே 14ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பி.ஆர்.கவாய், அவசர வழக்குகளை விசாரிக்க மீண்டும் வாய்மொழியாகவே கோரிக்கை வைக்க அனுமதி அளித்தார். எனினும், அந்த வாய்ப்பு, இனி இளம் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே தரப்படும் என, கடந்த 6ம் தேதி தெரிவித்திருந்தார்.
அதன்படி, தலைமை நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவு இன்று முதல் உச்ச நீதிமன்றத்தில் அமலுக்கு வருகிறது.
உயர் நீதிமன்றங்களில் இதே முறையை பின்பற்றுவது தொடர்பாக அந்தந்த தலைமை நீதிபதிகள் முடிவு செய்து கொள்ளலாம் என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.