கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கிடுக்கி
கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கிடுக்கி
UPDATED : அக் 14, 2025 10:27 AM
ADDED : அக் 13, 2025 11:55 PM

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அந்த விசாரணையை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு குழுவையும் அமைத்துள்ளது. மேலும், அதிகார வரம்பை மீறி சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது தொடர்பாக கேள்வி எழுப்பியதுடன், உயர் நீதிமன்ற பதிவாளர் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
கரூரில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த மாதம் மேற்கொண்ட பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், த.வெ.க., தலைவர் விஜய்க்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது.
மறுபுறம் இதே மாதரியான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை' என கூறி, த.வெ.க., தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது.
மேல் முறையீடு
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், ஐ.ஜி., அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டார். இந்நிலையில், விஜய் குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தெரிவித்த கருத்துகளுக்கு எதிராகவும், சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டதற்கு எதிராகவும், த.வெ.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதே வேளையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குழந்தையின் தந்தை பன்னீர்செல்வம், மனைவியை இழந்த செல்வராஜ், பா.ஜ., வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆகியோர் சார்பில், சி.பி.ஐ., விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், கடந்த வாரம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா அமர்வில் விசாரிக்கப்பட்டன.
அப்போது, போலீசார் கேட்டுக் கொண்டதால் தான் சம்பவம் நடந்த இடத்திலிருந்து விஜய் புறப்பட்டு சென்றதாகவும், இதை கவனத்தில் கொள்ளாமல் அவருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததாகவும் த.வெ.க., சார்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கிற்கான தீர்ப்பை நேற்று நீதிபதிகள் வெளியிட்டனர்.
குடிமக்கள் உரிமை
தீர்ப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது: கரூர் துயர சம்பவத்தை மக்களின் அடிப்படை உரிமை சார்ந்த விவகாரமாக கருதுகிறோம். 'பாரபட்சம் இல்லாமல், வெளிப்படை தன்மையுடன் விசாரணை நடக்க வேண்டும்' என கேட்பது குடிமக்களின் உரிமை. எனவே, இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றுகிறோம். சி.பி.ஐ., விசாரணையை கண்காணிக்க, சிறப்பு குழுவையும் அமைக்கிறோம்.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில், தமிழகத்தைச் சாராத இரு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அந்த சிறப்பு குழுவில் இடம் பெறுவர். மூன்று பேர் அடங்கிய சிறப்பு குழு, கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் தொடர்பாக விசாரணை நடத்தலாம். தேவைப்பட்டால் சிறப்பு குழு, எந்த நேரத்திலும் உச்ச நீதிமன்றத்தை நாடலாம். சி.பி.ஐ., தங்கள் மாதாந்திர விசாரணை அறிக்கையை, சிறப்பு குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மிகப்பெரிய சதி
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, 'இந்த விவகாரத்தில் மனுதாரர்கள் பன்னீர்செல்வம், செல்வராஜ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாங்கள் எந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை' என கூறியுள்ளதாக தெரிவித்தார்.
'தங்களது பெயரில் போலியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். இதில் மிகப்பெரிய சதி நடந்துள்ளது. அவர்கள் இருவரும், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆஜராகி உள்ளனர். நீதிபதிகள் நேரடியாக அவர்களிடமே விசாரிக்கலாம்' என வாதிட்டார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் தமிழக அரசு விரும்பினால், தனியாக மனு தாக்கல் செய்யலாம்; தேவைப்பட்டால், அதையும் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற உத்தரவிடுகிறோம்' என தெரிவித்தனர்.
அதன் பின், சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தை விசாரித்த விதம் குறித்து அதிருப்தி தெரிவித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை நியமித்த பிறகும், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த, எதற்காக சிறப்பு விசாரணை குழுவை உயர் நீதிமன்றம் அமைத்தது?
இந்த விவகாரம் உயர் நீதிமன்ற மதுரை கிளை வரம்புக்குள் வருகிறது. அவ்வாறு இருக்கையில், சென்னை உயர் நீதிமன்றம் ஏன் இந்த விவகாரத்தை விசாரித்தது? வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக தாக்கல் செய்த ஒரு வழக்கை, கிரிமினல் வழக்காக மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது ஏன்?
அதிகார வரம்பை மீறி சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது குறித்து, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், 'இந்த வழக்கை முடித்து வைக்கவில்லை' என தெளிவுப்படுத்திய நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பன உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம்' என உறுதியுடன் தெரிவித்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -