13 வயதிலேயே போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்; எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
13 வயதிலேயே போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்; எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
ADDED : டிச 15, 2025 03:32 AM

புதுடில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவ ஆய்வு நிறுவனம் பெங்களூரு, மும்பை உட்பட 10 நகரங்களில் நடத்திய ஆய்வில், பள்ளி செல்லும் மாணவர்கள் 13 வயது முதலே புகை மற்றும் மது உள்ளிட்ட போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகி வருவதாக எச்சரித்துள்ளது.
டில்லி எய்ம்சின், போதைக்கு அடிமையானவர்களுக்கான தேசிய சிகிச்சை மையத்தைச் சேர்ந்த டாக்டர் அஞ்சு தவான் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. டில்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், உள்ளிட்ட 10 நகரங்களின் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் எட்டு முதல் பிளஸ் 2 வரையிலான 5,920 மாணவர்களிடம், 2018 மே முதல் 2019 ஜூன் வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இருப்பினும் 'நேஷனல் மெடிக்கல் ஜர்னல் ஆப் இந்தியா' இதழில் தற்போது தான் அந்த ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: உயர் வகுப்புகளுக்கு செல்ல செல்ல போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கிறது. எட்டாம் வகுப்பைவிட பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தும் வாய்ப்பு இரு மடங்கு அதிகமாக உள்ளது.
பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் அறிமுகமாகும் ஆரம்ப சராசரி வயது, 13 ஆக உள்ளது. ரசாயனத்தை சுவாசித்து போதை அனுபவிப்பவர்கள் ஆரம்ப வயது, 11; ஹெராயின் பயன்படுத்தும் மாணவர்களின் ஆரம்ப வயது 12; போதை மாத்திரை பயன்படுத்து பவர்களின் ஆரம்ப வயது 12.5 ஆக உள்ளது.
எளிதாக கிடைக்கும் போதைப்பொருட்கள் குறித்து மாணவர்களிடம் நடத்திய ஆய்வில், 46.3 சதவீத பேர் புகையிலை, 36.5 சதவீதம் பேர் மது, 21.9 சதவீதம் பேர் பாங் எனப்படும் மது வகை, 16.1 சதவீதம் பேர் கஞ்சா, 15.2 சதவீதம் பேர் சுவாசிக்கும் போதை வஸ்துகள் எளிதாகக் கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது.
மாணவியரை விட மாணவர்களிடம் போதைப்பொருள் பயன்பாடு அதிகம் உள்ளது. ஆய்வில் பங்கேற்ற மாணவர்களில் 40 சதவீத பேர், தங்கள் குடும்பத்தில் புகையிலை அல்லது மது பயன்படுத்தும் உறுப்பினர் உள்ளதாக கூறினர். 95 சதவீத மாணவர்கள் 'போதைப்பொருள் தீங்கு விளைவிக்கும்' என ஒப்புக்கொள்கின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

