ADDED : செப் 24, 2024 07:16 AM

ஒருவரது வாழ்வில் செல்வம், அந்தஸ்து, படிப்பு, அறிவு, ஆற்றல் உட்பட அனைத்து விஷயங்கள் இருந்தாலும், குழந்தை வரம் இல்லை என்றால், கேட்பவர்களுக்கு பதில் சொல்லி முடியாது. அவருடைய வாழ்க்கையின் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
யசோதா கண்ணா
திருமணமான பெண்களுக்கு குழந்தை வரம் இல்லாவிட்டால் சமுதாயத்திலும், சொந்த பந்தத்தினர் மத்தியிலும் அவப் பேச்சுகளை கேட்க நேரிடுகிறது.
குழந்தை இல்லாத பெண்கள், தங்களுக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்றும், குழந்தை கிருஷ்ணர், தங்கள் வயிற்றில் எப்போது வருவார் எனவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பர். கிருஷ்ண ஜெயந்தி அன்று, 'யசோதை மடியிலிருந்து எங்கள் வயிற்றுக்குள் வா கண்ணா' என்று பக்தி பரவசத்துடன் அழைப்பர்.
இந்நிலையில், குழந்தை வரம் தரும் கோவிலாக ஒரு கிருஷ்ணர் கோவில் உள்ளது. அது பற்றி பார்ப்போமா?
பெங்களூரில் இருந்து மைசூரு செல்லும் வழியில், ராம்நகரின் சென்னபட்டணாவில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் உள்ளது தொட்டமல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் நவநீத கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலை 'அப்ரமேய சுவாமி கோவில்' என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீராமபிரான்
இந்த கோவில் 3,000 ஆண்டுகள் பழமையானது என்று சில வரலாற்று அறிஞர்கள் சொல்கின்றனர். இந்த கோவில் இருக்கும் இடத்தில் ஸ்ரீராமபிரான் தங்கி இருந்ததாகவும், அப்ர மேயரை வழிபட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
கோவிலுக்குள் ஏராளமான சுவாமி சிலைகள் இருந்தாலும், குழந்தை கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கருவறை தான், பக்தர்களை கவர்ந்து இழுக்கிறது. தவழும் தோரணையில் குழந்தை கிருஷ்ணரின் மயக்கும் விக்ரஹம் உள்ளது.
இதில் வெண்ணைய் பூசி அலங்கரித்தால், பார்ப்பதற்கு காண கண் கோடி வேண்டும். குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து மனமார வேண்டிக் கொண்டால், அவர்களின் பிரார்த்தனை நிறைவேறும். விரைவில் கிருஷ்ணரே, குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
குழந்தை பிறந்த பின் கோவிலுக்கு வரும் தம்பதியர் வெள்ளி தொட்டிலை காணிக்கையாக செலுத்தி, நன்றி கடன் செலுத்துகின்றனர். கோவிலில் ஏராளமான வெள்ளி தொட்டில்கள் காணிக்கையாக தொங்க விடப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

