நடுவானில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; ஸ்ரீநகரில் 205 பயணிகளுடன் அவசர தரையிறக்கம்
நடுவானில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; ஸ்ரீநகரில் 205 பயணிகளுடன் அவசர தரையிறக்கம்
ADDED : ஆக 29, 2025 07:01 PM

ஸ்ரீநகர்: டில்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு 205 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்களுடன் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர்.
டில்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி, இன்று (ஆக.29) 4 குழந்தைகள் மற்றும் 7 பணியாளர்கள் உள்பட 205 பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.
|
ஸ்ரீநகரை நெருங்கிய நேரத்தில், திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். தொடர்ந்து, மாலை 3.27 மணியளவில் அவசர அனுமதி பெற்று அந்த விமானம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர்.
பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், விமானத்தில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை; பாதுகாப்பாக உள்ளனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீப காலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணியர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.