முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுடன் சந்திப்பு 10 மாதங்களுக்கு பின் சோமண்ணா 'ஐஸ்'
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுடன் சந்திப்பு 10 மாதங்களுக்கு பின் சோமண்ணா 'ஐஸ்'
ADDED : மார் 03, 2024 06:57 AM

பெங்களூரு: முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை, முன்னாள் அமைச்சர் சோமண்ணா நேற்று சந்தித்து, லோக்சபா தேர்தலில் துமகூரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தரும்படி வலியுறுத்தினார்.
துமகூரு லோக்சபா எம்.பி.,யாக இருக்கும் பா.ஜ.,வின் பசவராஜுக்கு, இம்முறை மீண்டும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம். எனவே முன்னாள் அமைச்சர்கள் மாதுசாமி, சோமண்ணா ஆகிய இருவரும் தங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும்படி துண்டு போட்டுள்ளனர்.
கடந்த 2023ல் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில், வருணா, சாம்ராஜ்நகர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட சோமண்ணா படுதோல்வி அடைந்தார்.
இதற்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், அவரது மகன் விஜயேந்திராவும் தான் காரணம் என்பதை சூசகமாக பேசி வந்தார்.
அதிருப்தியில் இருந்த அவரை, மேலிட தலைவர்கள் அழைத்து சமாதானம் செய்தனர். இதையடுத்து, ராஜ்யசபா எம்.பி., பதவி வேண்டும் வலியுறுத்தினார். அதுவும் கிடைக்காததால் விரக்தி அடைந்தார். சில நாட்களாக, துமகூரு தொகுதி மக்களை சந்தித்து வருகின்றார். அங்குள்ள வெவ்வேறு மடங்களுக்கு சென்று, மடாதிபதிகளின் ஆதரவை திரட்டுகிறார்.
லோக்சபா தேர்தலில், துமகூரு தொகுதியில் வாய்ப்பு கொடுக்கும்படி வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
இதற்கிடையில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளர் மாதுசாமி, தனக்கு தான் துமகூரு சீட் என்று பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில், சோமண்ணா, அவரது மகன் அருண், பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள எடியூரப்பா வீட்டுக்கு நேற்று மாலை திடீரென வந்தனர். அவரது வீட்டில், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், தற்போதைய எம்.பி., பசவராஜ் ஏற்கனவே இருந்தனர்.
அப்போது, “துமகூரில் போட்டியிட விரும்புகிறேன். எனக்கு சீட் பெற்றுத் தாருங்கள்,” என, சோமண்ணா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜ.,வை பொருத்தவரையில் இந்த சந்திப்பு மிகவும் மகத்துவமானதாக கருதப்படுகிறது.
ஏனென்றால் எடியூரப்பா குடும்பத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்த அவர், சட்டசபை தேர்தல் முடிந்து 10 மாதங்களுக்கு பின், நேற்று தான் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

