செம்பை சங்கீத உற்சவ பொன்விழா நிகழ்ச்சிகள் நாளை துவக்கம்
செம்பை சங்கீத உற்சவ பொன்விழா நிகழ்ச்சிகள் நாளை துவக்கம்
ADDED : ஆக 16, 2025 12:33 AM

பாலக்காடு; செம்பை சங்கீத உற்சவத்தின் பொன் விழா ஆண்டு துவக்க விழா நாளை நடக்கிறது.
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் ஏகாதசி உற்சவம் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு, கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நடப்பதும் வழக்கம்.
50 ஆண்டு காணும் செம்பை சங்கீத உற்சவத்தின், பொன்விழா ஆண்டு துவக்க விழா, நாளை பாலக்காடு மாவட்டம் கோட்டாயி செம்பை கிராமத்தில் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு நடக்கும் துவக்க விழாவை, தேவஸ்தான அமைச்சர் வாசவன் துவக்கி வைத்து, பொன்விழா 'லோகோ'வை வெளியிட, குருவாயூர் கோவில் நிர்வாகி அருண்குமார் பெற்றுக்கொள்கிறார். கோவில் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன் தலைமை வகிக்கிறார். ஆலத்தூர் எம்.பி., ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பொன்விழா நினைவு தபால் தலை மற்றும் தபால் கவரை வெளியிடுகிறார்.
'செம்பை சங்கீதமும் வாழ்க்கையும்' என்ற வாழ்க்கை வரலாற்று நூலின் பொன்விழா பதிப்பை செம்பை சுரேஷ் வெளியிட, தரூர் எம்.எல்.ஏ., சுமோத் பெற்றுக்கொள்கிறார். நிகழ்ச்சியில் பிரபல கவிஞரும் எழுத்தாளருமான ஆலங்கோடு லீலா கிருஷ்ணன், செம்பை வைத்தியநாத பாகவதரின் நினைவுரையாற்றுகிறார்.
பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா குழுவினரின் இசைக்கச்சேரி நடக்கிறது.
பொன்விழா நிகழ்ச்சிகள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நிறைவு பெறுகிறது.
பொன்விழா ஆண்டு துவக்க விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், குருவாயூர் கோவில் தேவஸ்தான தலைவர் விஜயன், நிர்வாகி அருண்குமார், பொன்விழா வரவேற்பு குழு தலைவர் கீழத்தூர் முருகன், ஒருங்கிணைப்பாளர் செம்பை சுரேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.