ADDED : டிச 14, 2024 02:50 AM
சபரிமலை,:சபரிமலை ரோப்வே திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் நாட்ட தேவசம்போர்டு திட்டமிட்டுள்ளது.
சபரிமலையில் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. டிராக்டர்கள் சென்றுவருவதில் பக்தர்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டன. இதையடுத்து ரோப்வே மூலம் பொருட்கள் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. பல்வேறு பிரச்னைகள் காரணமாக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ரோப்வே திட்டம் தற்போது செயலுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தேவையான 4.54 எக்டேர் வன பூமிக்கு பதிலாக கொல்லம் மாவட்டத்தில் வருவாய் துறைக்கு சொந்தமான நிலம் வனத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இனி தேவசம்போர்டுக்கு தேவையான வன பூமியை பெரியாறு புலிகள் சரணாலய துணை இயக்குனர் மற்றும் ராந்நி வனத்துறை அதிகாரி வழங்க வேண்டும். இதற்காக வனத்துறையிடம் திருவிதாங்கூர் தேவசம்போர்டு விண்ணப்பம் அளித்துள்ளது. அனுமதி கிடைத்தவுடன் மகர விளக்கு சீசனுக்கு முன்பாகவே திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட தேவசம்போர்டு திட்டமிட்டுள்ளது.
ரோப்வேயின் நீளம் 2.7 கி.மீ. 40 முதல் 60 மீட்டர் உயரம் கொண்ட 5 தூண்கள் அமைக்கப்படுகிறது. 80 மரங்கள் வெட்டப்படும். இந்த மரங்கள் பெரியாறு புலிகள் சரணாலய காட்டுக்குள் வருவதால் இதற்கு அதன் இணை இயக்குனர் அனுமதி வழங்க வேண்டும்.
முதலில் எடுக்கப்பட்ட சர்வே படி 300 மரங்கள் வெட்ட வேண்டி இருந்தது. பின்னர் புதிதாக எடுக்கப்பட்ட சர்வே படி வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை 80 ஆக குறைக்கப்பட்டது. புதிய சர்வே திட்டத்தை வனத்துறை அங்கீகரித்து கேரள உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதால் அனுமதி விரைவில் கிடைத்துவிடும் என்று தேவசம்போர்டு எதிர்பார்க்கிறது.

