உத்தரகாசியில் தொடரும் மீட்பு பணிகள்; மேகவெடிப்பில் கேரளா சுற்றுலா பயணிகள் 28 பேர் மாயம்!
உத்தரகாசியில் தொடரும் மீட்பு பணிகள்; மேகவெடிப்பில் கேரளா சுற்றுலா பயணிகள் 28 பேர் மாயம்!
UPDATED : ஆக 07, 2025 07:29 AM
ADDED : ஆக 06, 2025 05:52 PM

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேக வெடிப்புக்குப் பிறகு கேரளாவைச் சேர்ந்த 28 பேர் கொண்ட சுற்றுலா குழு காணாமல் போனது. அவர்களைத் தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
உத்தராகண்டின் உத்தரகாசியில், தாராலி கிராமத்தில் நேற்று பகல் 1:45 மணிக்கு திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், மலை உச்சியில் இருந்து சேறு, சகதியுடன் கரை புரண்டு வந்த வெள்ளம் குறுக்கே இருந்த வீடுகள், ஹோட்டல்கள், விடுதிகள், கட்டடங்கள் என அனைத்தையும் வாரி சுருட்டி சென்றது.
இதில் ஏராளமான கட்டடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதனால், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காட்டாற்று வெள்ளத்தில் சேதமடைந்த பகுதிகளில் 2வது நாளாக மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சில கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் உத்தரகாசி கலெக்டர் பிரசாந்த் ஆர்யா தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் உயர் அதிகாரிகளிடம் பேசி வருவதாகவும், நிலைமையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
28 பேர் மாயம்
திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த 28 பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் குழு காணாமல் போயுள்ளது. காணாமல் போன 28 பேரில் 20 பேர் மஹாராஷ்டிராவில் குடியேறிய கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்ற எட்டு பேர் கேரளாவின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள், ஒரு நாள் முன்பு அவர்களுடன் பேசியதாகவும், அதில் தம்பதியினர் கங்கோத்ரியை விட்டு வெளியேறுவதாகக் கூறியதாகவும் தெரிவித்தனர்.அதே பாதையில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன, மேலும் உறவினர்கள் இப்போது அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றனர்.
மீட்புப்பணிகள்
இதற்கிடையில், கீர் கங்கா நதியில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் ஒன்பது இந்திய ராணுவ வீரர்களும் காணாமல் போயுள்ளனர். இதுவரை மொத்தம் ராணுவ வீரர்கள் 11 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி நடக்கிறது.
மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும் இந்த சம்பவத்தைக் கவனத்தில் கொண்டு உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பேசினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் உடனுக்குடன் செய்யுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.