ADDED : பிப் 10, 2024 04:13 PM

புதுடில்லி: 'ஒரே நாடு ஒரே தேர்தல் நமது அரசியல் சாசனத்திற்கு எதிரானது' என திமுக மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவுக்கு திமுக கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராம்நாத் கோவிந்த்தை திமுக எம்.பி. வில்சன் நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அவர் மனுவில் கூறியிருப்பதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. எனவே கைவிட வேண்டும். அரசியல் சட்டத்திற்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் எதிரானது.
ஒரே நேரத்தில் பார்லிமென்டிற்கும், சட்டசபைகளுக்கும் தேர்தல் என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது. இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

