ராகுல் பார்லியில் பேசிய பொய்கள்; சுக்கு நூறாக நொறுக்கிய விமானப்படை தளபதி!
ராகுல் பார்லியில் பேசிய பொய்கள்; சுக்கு நூறாக நொறுக்கிய விமானப்படை தளபதி!
UPDATED : ஆக 10, 2025 03:14 PM
ADDED : ஆக 10, 2025 02:21 PM

புதுடில்லி: 'ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நமது விமானிகளின் கைகள் கட்டப்பட்டன. படைகளுக்கு சுதந்திரம் இல்லை. அரசியல் உறுதி இல்லை என லோக்சபாவில் பேசிய ராகுல் குறிப்பிட்டார். ஆனால், இதனை மறுத்த விமானப்படை தளபதி ஏபி சிங், 'ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றி பெறுவதற்கு அரசியல் மன உறுதியும், படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டதும் தான் காரணம் என்று தெரிவித்தார்.
விவாதம்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்.,22 ல் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 ஹிந்து சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது மே 7ம் தேதி அதிகாலை இந்திய படையினர், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தினர்.
இதில், லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலை இந்திய படைகள் முறியடித்தன. இரு தரப்புக்குமான மோதல் கடந்த மே 10ம் தேதி முடிவுக்கு வந்து.
ஆனால், இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டன. தொடர்ந்து மத்திய அரசு விவாதத்துக்கு ஒப்புக் கொண்டது.
மறைக்க முயல்கிறார்
ஆப்பரேஷன் சிந்தூர் நடந்தபோது, உலகில் ஒரு நாடு கூட பாகிஸ்தான் என்ற வார்த்தையை சொல்ல வில்லை. அதாவது, அவர்கள் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே தராசில் ஒரே மாதிரி பார்த்தார்கள். பாகிஸ்தான் தான் பயங்கரவாத நாடு, இந்தியா பாதிக்கப்பட்ட நாடு என்பதை புரிந்து உலகம் கொள்ளவில்லை. மேலும், நமது தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவம் நிலை குலைந்து நின்றபோது, அதன் தளபதியை அழைத்து, உங்கள் ராணுவ தளங்களை நாங்கள் தாக்க மாட்டோம் என்று இந்தியா உறுதிமொழி கொடுக்க என்ன அவசியம்? ராணுவத்தின் கைகளை அவர் கட்டிப் போட்டதால் தான் நாம் ரபேல் விமானங்களை இழக்க நேரிட்டது. அதைக் கூட மறைக்க முயல்கிறார் மோடி. இவ்வாறு ராகுல் பேசினார்.
முக்கிய பங்கு
இந்நிலையில்,நேற்று ( ஆக.,09) பெங்களூரில் நடந்த விமான தளபதி எல்.எம்.கத்ரே நினைவு சொற்பொழிவில் நமது விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் கூறியதாவது: 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டது. தாக்குதலுக்கு முன்பாகவே, பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அடையாளம் காணப்பட்டன.
பாகிஸ்தான் தாக்குதலில் இருந்து தப்பிக்க, நம் வான் பாதுகாப்பு அமைப்பு சிறப்பாக வேலை செய்தது. ரஷ்யாவிடம் இருந்து சமீபத்தில் வாங்கிய, 'எஸ்- 400' கவச அமைப்பு, பெருமளவு உதவியது. அந்நாட்டு ராணுவம் வீசிய குண்டுகள், ஏவுகணைகளை இந்த அமைப்பு முறியடித்து, வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.
மிகப்பெரிய சேதம்
'எஸ் - 400' கவச அமைப்பை மீறி பாக்., ராணுவத்தால் எதையும் செய்ய முடியவில்லை.இது ஒரு உயர் தொழில்நுட்பப் போர். 90 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த போர், பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. அந்நாட்டின் ஐந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. எதிரிகளின் விமானங்கள், ஆயுதங்களை கண்காணித்து தாக்குதலை முறியடிக்கும் 'ஏ.இ.டபிள்யூ.சி' எனப்படும் மிகப்பெரிய போர் விமானமும், இந்த தாக்குதலின் போது அழிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, ஜகோபாபாத் நகரில் இருந்த விமான தளத்தில் நடத்திய தாக்குதலில் எப் - 16 விமானங்கள் சுக்குநுாறாகின. இந்த விமானங்களை, அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கியிருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.