ADDED : நவ 26, 2025 02:16 AM
புதுடில்லி: புதுடில்லி தேசிய உயிரியல் பூங்காவில், இரண்டு நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த, ஐந்து வயது மலைப்பாம்பு உயிரிழந்தது.
இதையடுத்து, மலைப்பாம்புகளின் எண்ணிக்கை ஏழாக குறைந்து உள்ளது.
இதுகுறித்து, உயிரியல் பூங்கா இயக்குநர் சஞ்சீத் சிங் கூறியதாவது:
டில்லி உயிரியல் பூங்காவில் எட்டு மலைப்பாம்புகள் இருந்தன. அதில், ஐந்து வயதான, 10 அடி நீளமுள்ள ஒரு பாம்புக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டது. இறந்த மலைப்பாம்பு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பிறகுதான், உயிரிழப்புக்கான காரணம் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேநேரத்தில், உயிரியல் பூங்காவில் குளிர்காலத்துக்கான ஏற்பாடுகளை செய்யாததால் மலைப்பாம்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது.டில்லி உயிரியல் பூங்காவில் இருந்து சமீபத்தில் சில நரிகள் தப்பித்துச் சென்றன.
அதில், இரண்டு நரிகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. மற்ற நரிகளை பூங்கா ஊழியர்கள் கூண்டுகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

