இந்தியாவில் 'காமன்வெல்த் 2030' போட்டி நடத்த முன்மொழிவு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவில் 'காமன்வெல்த் 2030' போட்டி நடத்த முன்மொழிவு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ADDED : ஆக 27, 2025 05:04 PM

புதுடில்லி: 2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை இந்தியாவில் நடத்தும் உரிமை கோரலுக்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் தலைநகர் டில்லியின் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2030ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு உரிமை கோருவதற்கான முன்மொழிவை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் முன்மொழிந்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை அதிகாரபூர்வமாக சமர்ப்பிக்க, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதனை நடத்துவதற்கான ஒப்பந்தம் மற்றும் குஜராத் அரசு நிதி உதவி வழங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அனுமதி கிடைக்கும் பட்சத்தில் போட்டிகளை ஆமதாபாத்தில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அங்கு உலகத் தரம் வாய்ந்த மைதானங்கள், அதிநவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி மையங்கள் அமைந்துள்ளன. 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனல் நடந்த மிகப்பெரிய நரேந்திர மோடி மைதானமும் அமைந்துள்ளது.
அண்மையில் காமன்வெல்த் விளையாட்டு குழுவினர் ஆமதாபாத்தில் ஆய்வு செய்தனர். மேலும், குஜராத் அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தியிருந்தனர். காமன்வெல்த் போட்டியில் மொத்தம் 72 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.