அரசு கட்டடங்களில் தனியார் நிகழ்ச்சி: கர்நாடக அரசு மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
அரசு கட்டடங்களில் தனியார் நிகழ்ச்சி: கர்நாடக அரசு மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
ADDED : நவ 07, 2025 01:32 AM

பெங்களூரு: அரசு கட்டடங்கள், பொது இடங்களில் ஊர்வலம், கூட்டங்கள் நடத்த அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி, கர்நாடக காங்., அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உயர் நீதிமன்ற தார்வாட் கிளை அமர்வு தள்ளுபடி செய்தது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.
'அரசு கட்டடங்கள், சாலைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களில் பதிவு செய்யப்பட்ட, செய்யப்படாத தனியார் அமைப்புகள், தங்கள் நிகழ்ச்சிகளை போலீஸ் அனுமதி பெற்ற பின் நடத்த வேண்டும்.
இல்லையெனில், சட்ட விரோதமாக கூடியதாக வழக்கு பதிவு செய்யப்படும்' என்று மாநில அரசு, அக்., 18ல் அறிவித்தது.
ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் பேரணிகளை தடை செய்யும் நோக்கத்துடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இந்த அறிவிப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தின் தார்வாட் கிளையில், ஹூப்பள்ளி மறுவாழ்வு சேவை அறக்கட்டளை, 'வி - கேர்' அறக்கட்டளை உட்பட நான்கு பேர் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, அரசின் உத்தரவுக்கு இடைக் கால தடை விதித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, மாநில அரசு மேல்முறையீடு செய்தது. விசாரித்த நீதிபதிகள் பண்டிட், கீதா ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசின் மனுவை நேற்று தள்ளுபடி செய்தது.

