
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரசின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தா லும், அதில், 'எந்த ஒரு மதத்திற்கும் ஆதரவாக நான் செயல்படுவதில்லை' என சொல்லி வருகிறார் முதல்வர் மம்தா.
'சிறுபான்மையினரின் ஓட்டுகளைக் கவர அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார் மம்தா பானர்ஜி' என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. 'மம்தாவின் அரசு ஹிந்து விரோத அரசு என்பதுடன், நம் பக்கத்து நாடான வங்கதேசத்தில் உள்ளோரை மம்தா இங்கு குடியேற வைத்துள்ளார்.
'காரணம், அவர்களுடைய ஓட்டு வங்கி' என, மத்திய அமைச்சர் அமித் ஷா தொடர்ந்து, மம்தாவை விமர்சித்து வருகிறார்.
சமீபத்தில் கொல்கட்டாவின், 'நியூ டவுன்' என்ற இடத்தில், 'புதிய துர்கா கோவில் கட்டப்படும்' என மம்தா அரசு அறிவித்தது. 'துர்கா ஆங்கன்' எனப்படும் இந்த திட்டத்தின் கீழ், 17 ஏக்கர் நிலத்தில் 262 கோடி ரூபாய் செலவில் துர்கா கோவில் மற்றும் இதர வசதிகள் அனைத்தும் கட்டப்பட உள்ளது. ஒரே சமயத்தில், 1,000 பக்தர்கள் கோவிலில் கூட முடியும்; 1,008 துாண்கள் கொண்ட மண்டபமும் இதில் அடங்கும்.
மம்தா இப்படி திடீரென கோவில் பக்கம் திரும்ப காரணம், தமிழகத்துடன் மேற்கு வங்கத்திற்கும் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் தான். 'சிறுபான்மையினரை மட்டுமின்றி, பெரும்பான்மை சமூகத்தினரையும் மம்தா நன்றாக கவனிக்கிறார் என்பதற்காகத் தான் இதைச் செய்துள்ளார்' என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

