மிசோரத்தில் ரூ.9 ஆயிரம் கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் மோடி
மிசோரத்தில் ரூ.9 ஆயிரம் கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் மோடி
UPDATED : செப் 13, 2025 11:37 AM
ADDED : செப் 13, 2025 11:35 AM

அஸ்வால்: நீண்ட நாட்களாக சில அரசியல் கட்சிகள் ஓட்டு வங்கி அரசியலை செய்து வருகின்றன என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மிசோரமில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பில் 51 கி.மீ நீளமுள்ள பைராயி- சாய்ராங் ரயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 45 சுரங்கப்பாதைகள், 55 பெரிய பாலங்களை உள்ளடக்கிய ரயில்வே பாதை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மிசோரம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு தடைகளை தாண்டி பொறியாளர்கள், ஊழியர்கள் முயற்சியால் பைராயி- சாய்ராங் ரயில் பாதை சாத்தியம் ஆகி உள்ளது. ரயில்வே இணைப்பு மட்டுமல்ல, மாற்றத்திற்கான உயிர்நாடி. மிசோரம் மக்களின் வாழ்வாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக சில அரசியல் கட்சிகள் ஓட்டு வங்கி அரசியலை செய்து வருகின்றன.
அதிக ஓட்டுக்கள் மற்றும் இடங்களை பெறக்கூடிய பகுதிகளில் மட்டுமே அவர்களின் கவனம் உள்ளது. அத்தகைய கட்சிகளால் மிசோரம் உள்ளிட்ட சில வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. எங்கள் அணுகுமுறை வித்தியாசமானது. புறக்கணிக்கப்பட்ட மக்கள் தற்போது முன்னணியில் உள்ளனர்.
கடந்த 11 ஆண்டுகள் செய்த முயற்சியால் வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சி எஞ்சினாக மாறியுள்ளன. வடகிழக்கு மாநிலங்கள் தொழில்முனைவோருக்கான முக்கிய மையமாக மாறுகிறது. 4,500 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
காங்கிரஸ் ஆட்சியின் போது, மருந்துகள், காப்பீட்டுக் கொள்கைகள் அதிக வரி விதிக்கப்பட்டன. மருந்துகள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை இருந்தது. இன்று மலிவு விலையில் கிடைக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.