ADDED : ஏப் 23, 2024 02:22 PM

திருவனந்தபுரம்: வரும் லோக்சபா தேர்தலில் இந்திய மக்கள் பிரதமர் மோடிக்கு பாடம் புகட்டுவார்கள் என காங்கிரஸ் தலைவர் கார்கே பேசினார்.
கேரள மாநிலம் செங்கனூரில் நடந்த நிகழ்ச்சியில் கார்கே பேசியதாவது: கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, கறுப்புப் பணத்தை மீட்பேன். ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என பிரதமர் மோடி உறுதி அளித்தார். கடந்த 10 ஆண்டுகளில் 20 கோடி வேலை வாய்ப்புகளை பா.ஜ., அரசு உருவாக்கியுள்ளதா?. சிட்டிங் எம்.பி.க்கள், பா.ஜ., வேட்பாளர்கள் மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்ததும் அரசியல் சட்டத்தை மாற்றப் போவதாக அறிக்கை விடுகிறார்கள்,
பாடம்
வரும் லோக்சபா தேர்தலில் இந்திய மக்கள் பிரதமர் மோடிக்கு பாடம் புகட்டுவார்கள். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும். தற்போதுள்ள இடஒதுக்கீட்டின் உச்ச வரம்பை அதிகரிப்போம். நான் பிரதமர் மோடிக்கு சவால் விடுகிறேன்.
சமூக நீதி
இந்த நாட்டின் ஏழை மக்கள் மீது அவருக்கு அக்கறை இருந்தால், சமூக நீதி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்த விரும்பினால், அரசியலமைப்பை மாற்றுவோம் என்று கூறும் அனைத்து பா.ஜ., தலைவர்களையும் அவர் கட்சியில் இருந்து நீக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு தைரியம் இருந்தால் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு கார்கே பேசினார்.

