நம் ராணுவ வீரர்களும் இனி 'இன்ஸ்டாகிராம்' பயன்படுத்தலாம்
நம் ராணுவ வீரர்களும் இனி 'இன்ஸ்டாகிராம்' பயன்படுத்தலாம்
ADDED : டிச 26, 2025 12:57 AM

புதுடில்லி: சமூக ஊடகமான, 'இன்ஸ்டாகிராமை' நம் ராணுவ வீரர்கள் பயன்படுத்த நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தகவல் தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதே நேரம் ராணுவ ரகசியங்கள் கசிவதை தடுக்கும் வகையில், சமூக ஊடகங்களை ராணுவ வீரர்கள் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அனுமதி
இதற்கு முன், 'எக்ஸ்' சமூக ஊடகத்தில் மட்டும் கணக்கு வைத்துக் கொள்ள அனுமதி தரப்பட்டது. எனினும், 'அதில் கருத்துகளை பகிரவோ, ஆதரித்து, 'லைக்' செய்யவோ கூடாது' என, நிபந்தனை விதிக்கப்பட்டது.
தற்போது, அதே விதிகளுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிரும், 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகத்திலும் கணக்குகளை துவங்க ராணுவ வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப உலகில், நம் நாட்டிற்கு உள்ளேயும், வெளிநாடுகளிலும் என்ன நடக்கிறது என்பதை, ராணுவ வீரர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, சமூக ஊடக பயன்பாட்டு விதிமுறைகளில், நம் ராணுவம் இந்த திருத்தத்தை செய்துள்ளது. அதன்படி சமூக ஊடகங்களில், ராணுவ வீரர்கள் செயலற்ற பார்வையாளராக மட்டுமே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வினை
அவர்கள் சொந்த கருத்துகள், புகைப்படங்களை பதிவிடவோ அல்லது பிறரின் கருத்துக்கு எதிர்வினையாற்றவோ, அந்த கருத்தை விரும்பி மற்றவருக்கு பகிரவோ கூடாது எனவும் கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கவனக் குறைவாக கூட, ராணுவம் சார்ந்த தகவல்கள் கசிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

