பீஹாரில் ஊடுருவியவர்களை வெளியேற்றுவதே எங்களின் நோக்கம்; அமித் ஷா திட்டவட்டம்
பீஹாரில் ஊடுருவியவர்களை வெளியேற்றுவதே எங்களின் நோக்கம்; அமித் ஷா திட்டவட்டம்
UPDATED : செப் 28, 2025 02:41 AM
ADDED : செப் 28, 2025 02:39 AM

அராரியா: பீஹாரில் சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை வெளியேற்றுவது மட்டுமே எங்களின் நோக்கம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
பீஹார் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, பாஜ சார்பில் அராரியா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
அவர் பேசியதாவது; இந்தத் தேர்தலில் கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதும், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவை முதல்வராக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் (காங்கிரஸ், ஆர்ஜேடி) நோக்கமாக இருந்து வருகிறது. ஆனால், பீஹாரில் சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை வெளியேற்றுவது மட்டுமே பாஜவினரின் நோக்கமாகும்.
எனவே பெரும்பான்மை இடங்களில் என்டிஏ கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். புனித பூமியான பீகாரில் ஊடுருவியவர்களை வெளியேற்றும் பணியை பாஜ செய்யும் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.
மத்திய அரசிலும் பீகாரிலும் ஆட்சியில் இருந்த போது, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் மெகா ஊழலை செய்தன. லாலு பிரசாத் யாதவும், அவரது கூட்டாளிகளும் பீகாரை கொள்ளையடித்தனர். மேலும், பல மோசடி மற்றும் முறைகேடுகளையும் செய்துள்ளனர்.
பீஹாரில் சட்டவிரோதமாக ஊடுருவியவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக, ராகுல் தலைமையில் வாக்காளர் அதிகார யாத்திரை நடத்தப்பட்டது. சோனியாவின் மகனும் (ராகுல்), லாலு பிரசாத் மகனும் (தேஜஸ்வி) இரு இளவரசர்கள். பீஹாருக்காக அவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள்? மோடி அரசு பீஹாருக்கு என்ன செய்துள்ளது என்பதற்கு என்னிடம் ஒரு நீண்ட பட்டியல் உள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

