இந்திய மண்ணில் அதுக்கு வாய்ப்பே இல்லை; வங்கதேசத்திற்கு மத்திய அரசு பதில்
இந்திய மண்ணில் அதுக்கு வாய்ப்பே இல்லை; வங்கதேசத்திற்கு மத்திய அரசு பதில்
UPDATED : ஆக 21, 2025 08:35 AM
ADDED : ஆக 21, 2025 08:31 AM

புதுடில்லி: இந்திய மண்ணில் பிற நாட்டின் அரசியல் செயல்பாடுகளை அனுமதிக்க மாட்டோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய நகரங்களில் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி அலுவலகங்கள் செயல்படுவதாக வங்கதேச அரசு குற்றம்சாட்டியுள்ளது. இதன் காரணமாக, இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வங்கதேச அரசின் இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாக ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது; இந்தியாவில் எந்த நகரங்களிலும் வங்கதேசத்தின் அவாமி லீக் கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் ஏதுமில்லை. இந்திய மண்ணில் பிற நாட்டின் அரசியல் செயல்பாடுகளை அனுமதிக்க மாட்டோம்.
மக்களின் விருப்பத்தையும் ஆணையையும் உறுதி செய்வதற்காக, வங்கதேசத்தில் சுதந்திரமான, நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என்ற தனது எதிர்பார்ப்பை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது, எனக் கூறினார்.
வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, ஷேக் ஹசினா, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தது குறிப்பிடத்தக்கது.