ADDED : ஜன 28, 2024 02:24 AM

ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீஹார் முதல்வருமான நிதீஷ் குமார், ஆளும் கூட்டணியில் இருந்து இன்று வெளியேறி, தன் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாக, பா.ஜ., ஆதரவுடன், ஒன்பதாவது முறையாக, முதல்வராக அவர் பதவியேற்க உள்ளார் என்றும், கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பரபரப்பு
பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மகாகட்பந்தன் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
கடந்த, 2015 தேர்தலில் இந்தக் கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால், 2017ல், அதில் இருந்து விலகிய நிதீஷ் குமார், பா.ஜ., உடன் கூட்டணி அமைத்தார்.
கடந்த, ௨௦௨௦ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வென்று, நிதீஷ் குமார் முதல்வரானார். ஆனால், 2022ல், கூட்டணியை முறித்த அவர், மீண்டும் மகாகட்பந்தன் கூட்டணியில் இணைந்தார்.
இவ்வளவு அரசியல் மாற்றங்கள் நடந்தபோதும், குறைந்த தொகுதிகளில் வென்ற போதிலும், நிதீஷ் குமாரே முதல்வராக இருந்துள்ளார்.
பா.ஜ.,வுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணி உருவாக முக்கிய காரணியாக இருந்தார். அவருடைய முயற்சியில்தான், 28 கட்சிகள் அடங்கிய, இண்டியா கூட்டணி உருவானது.
ஆனாலும், இண்டியா கூட்டணி மற்றும் மகாகட்பந்தன் கூட்டணியில் உரசல்கள் இருந்து வந்தன.
இந்த நிலையில், கூட்டணி அரசில் இருந்து விலகி, மீண்டும் பா.ஜ.,வுடன் நிதீஷ் குமார் கூட்டணி அமைக்கப் போவதாக கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்படுகிறது.
இதை உறுதி செய்யும் வகையில், பீஹாரில் அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தன.ஏற்கனவே திட்டமிட்ட அரசு நிகழ்ச்சிகளில் நிதீஷ் குமார் நேற்று பங்கேற்றாலும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த, துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் அதில் பங்கேற்கவில்லை.
இதற்கிடையே, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், பா.ஜ., அலுவலகங்களில் மூத்த தலைவர்கள் நேற்று தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.
இந்த சூழ்நிலையில், நிதீஷ் குமார் இன்று தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த சில மணி நேரத்துக்குள், பா.ஜ.,வின் ஆதரவுடன், அவர் ஒன்பதாவது முறையாக முதல்வராக பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது.
கூட்டணி அரசில் இருந்து, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த அமைச்சர்களை நீக்கிவிட்டு, பா.ஜ.,வைச் சேர்ந்தவர்களை அவர் சேர்ப்பார் என்றும் பேசப்படுகிறது.
பெரும் பின்னடைவு
ஆனால், எந்தக் கட்சியும், இதுவரை வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க வில்லை. தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன.
இது ஒருபக்கம் இருக்க, இண்டியா கூட்டணி கலகலத்துள்ளது. ஏற்கனவே, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக கூறியுள்ளார். ஆம் ஆத்மியும், பஞ்சாபில் தனித்து போட்டியிடப் போவதாக கூறியுள்ளது. அதே நேரத்தில், கூட்டணியில் தொடர்வதாகவும் இந்த கட்சிகள் கூறியுள்ளன.ஆனால், பா.ஜ.,வுடன் கூட்டணி அரசு அமைக்கும் பட்சத்தில், இண்டியா கூட்டணியில் இருந்து நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் நிச்சயம் வெளியேறும். இது கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.
பீஹாரில் ஆட்சி மாற்றம் மற்றும் இண்டியா கூட்டணி உடைவதை தடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

