இந்திய விண்வெளி துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்: பிரதமர் மோடி உறுதி
இந்திய விண்வெளி துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்: பிரதமர் மோடி உறுதி
ADDED : நவ 27, 2025 02:00 PM

புதுடில்லி: ''இந்திய விண்வெளி துறையில் சீர்திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்,'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில், விண்வெளி தொழில்துறை தொடர்புடைய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அவர் இந்தியாவின் முதல் தனியாருக்கு சொந்தமான ராக்கெட் விக்ரம்1-ஐ அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
விண்வெளி துறையில் சீர்திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. உலக முதலீட்டாளர்களுக்கு இந்திய விண்வெளித் துறை ஈர்ப்பு மிகுந்ததாக மாறி வருகிறது. நமது தனியார் துறையினரும் விண்வெளித் தொழில் துறையில் சிறப்பாக செயல்பட தொடங்கியுள்ளனர்.
இந்த துறையில் தொடங்கப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிய நம்பிக்கையைத் தருகின்றன. இதனால் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். பல ஆண்டுகளாக நமது விண்வெளி பயணத்திற்கு இஸ்ரோ உறுதுணையாக இருக்கிறது.
இந்திய இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு அளிக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு வாய்ப்பையும் புத்திசாலித்தனமாக பயன்படுத்துகின்றனர். விண்வெளி துறையை போல அணுசக்தி துறையிலும் வரலாற்று சிறப்பு மிக்க சீர்திருத்தங்களை செய்து வருகிறோம்.
வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் முதலீட்டாளர்கள் பங்களிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த 'ஸ்கைரூட்' ஸ்டார்ட்அப் நிறுவனம் இந்தியாவின் முன்னணி தனியார் விண்வெளி தொழில் துறை நிறுவனமாகும்.

