அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு தேர்தலில் என்ன செய்யும்; ராகுலை விளாசிய பாஜ
அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு தேர்தலில் என்ன செய்யும்; ராகுலை விளாசிய பாஜ
ADDED : செப் 01, 2025 09:29 PM

புதுடில்லி: ராகுல் பொறுப்பற்றவர் என்பதை நாடு உணர வேண்டும்: அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு தேர்தலில் என்ன செய்யும் என்று பாஜ மூத்த தலைவரும், எம்பியுமான ரவிசங்கர் பிரசாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பீஹாரில் இருந்து குடி பெயர்ந்தவர்கள், இறந்து போனவர்கள், இரண்டு இடத்தில் பெயர் உள்ளவர்கள் என 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் கமிஷன், புதிய வரைவு வாக்காளர் பட்டியலை ஆக.,1ல் வெளியிட்டது.
இதை எதிர்த்து வாக்காளர் உரிமை யாத்திரை என்ற பெயரில், ராகுல் மேற்கொண்ட யாத்திரை இன்று (செப்.1) பாட்னாவில் முடிவடைந்தது. அப்போது பேசிய அவர், ஓட்டுத்திருட்டு என்ற அணுகுண்டுக்கு பிறகு, ஹைட்ரஜன் குண்டு வரப்போகிறது என்று தெரிவித்தார்.
இந் நிலையில் ராகுலின் இந்த பேச்சு, பொறுப்பற்றது என்று பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்பியும் ரவிசங்கர் பிரசாத் கூறி இருப்பதாவது;
ராகுல் பேச்சைக் கேட்கும் போதெல்லாம் பார்லி. உள்ளேயோ அல்லது வெளியேயோ, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள நேரம் எடுக்கும். இன்று அவர், அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு என்கிறார். அதற்கும், தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்?
அவர் ஏன் இப்படி தன்னையே இழிவுபடுத்திக் கொள்கிறார். ராகுல் பொறுப்பற்றவர் என்பதை நாடு புரிந்து கொள்ள வேண்டும். அவர் மேற்கொண்ட யாத்திரையில், ராகுல் எப்போதும் காரில் முன்பக்கத்தில் இருந்தார், தேஜஸ்வி யாதவ் அவருக்குப் பின்னால் நின்றார்.
பாட்னாவில் 2 எம்.பி.க்கள் உள்ளனர், அவர்களில் ஒருவர் நான், மற்றவர் மிசா பாரதி. அவர் எங்கும் காணப்படவில்லை. பீஹாரில் தேஜஸ்வி யாதவ் ஏன் இரண்டாவது இடத்தில் உள்ளார்? காங்கிரசுக்கு இங்கு வாக்கு இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.