பெண்களை அச்சுறுத்தும் நிர்வாண கும்பல்: வீடுகளில் முடங்கிய உ.பி., கிராம மக்கள்
பெண்களை அச்சுறுத்தும் நிர்வாண கும்பல்: வீடுகளில் முடங்கிய உ.பி., கிராம மக்கள்
ADDED : செப் 07, 2025 05:57 AM

மீரட் : உத்தர பிரதேசத்தில், பெண்களை அபகரித்துச் செல்ல முயலும் நிர்வாண கும்பலால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரை ஒட்டி தவுராலா கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் பெண்களை குறிவைத்து நிர்வாண கும்பல் ஒன்று இழுத்துச் செல்வதாக புகார் எழுந்துள்ளது.
சமீபத்தில், வேலைக்கு சென்றுவிட்டு வயல்வெளி வழியாக வீடு திரும்பிய இளம் பெண் முன், இரு ஆண்கள் திடீரென நிர்வாணமாக தோன்றி அருகில் உள்ள ஆள் அரவமற்ற பகுதிக்கு இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து அப்பெண் தப்பி வந்ததாகவும் சொல்லப் படுகிறது.
இது தொடர்பாக, கிராம மக்களிடமும், போலீசிலும் அப்பெண்ணின் கணவர் புகாரளித்தார்.
சம்பவம் குறித்து கிராம தலைவர் ராஜேந்திர குமார் கூறுகையில், “கடந்த சில வாரங்களில், இதுபோல் மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன. அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள், இதுகுறித்து வெளியே சொல்லவில்லை.
''நான்காவது சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ளூர் ஆண்கள் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், அங்கு யாரும் இல்லை. இந்த சம்பவங்களால், உள்ளூர் பெண்கள் தனியாக வெளியே வருவதில்லை,” என்றார்.
இதையடுத்து, தவுராலா கிராமத்தில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் பகுதியில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, ட்ரோன்கள் வாயிலாகவும் கண்காணிப்பு பணி தொடர்கிறது.
இருப்பினும், சந்தேகப்படும்படியாக மர்ம நபர்கள் நடமாட்டம் எதுவும் தெரியவில்லை என, போலீசார் தெரிவித்தனர்.
இது, முற்றிலும் வதந்தி என்றும், போலீசாருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் மர்ம நபர்கள் செய்த செயல் என்றும் கூறப்படுகிறது.