ADDED : மார் 06, 2024 04:41 AM
பெங்களூரு : கல்வித்துறை 2024 - 25ம் ஆண்டின் பாடத் திட்டங்களை மாற்றியுள்ளது.
தொடக்க, உயர்நிலைப் பள்ளி கல்வித்துறை, பாடத் திட்டங்களை மாற்ற, மஞ்சுநாத் ஹெக்டே தலைமையில் கமிட்டி அமைத்துள்ளது. கமிட்டியில் இருந்த வல்லுனர்கள், பாடத் திட்டங்களை மாற்றி அறிக்கை அளித்தனர். இதன் அடிப்படையில் ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்களை கல்வித்துறை மாற்றி அமைத்துள்ளது.
சில பாடங்களை நீக்கிவிட்டு, புதிய பாடங்களை சேர்த்துள்ளது. கர்நாடக அத்தியாயம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய படங்கள் மற்றும் விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மாநில, தேசிய பாடத் திட்டங்கள் மற்றும் அரசியலமைப்பின் நோக்கங்கள் பாதிக்கப்படாமல், மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6ம் வகுப்பு பாடத்தில் என்னென்ன மாற்றங்கள்:
தென் மாநிலங்களின் புராதன அரச வம்சங்கள், வட மாநிலங்களின் அரச குடும்பங்களின் பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளன. வேத காலத்தின் கலாசாரம், புதிய தர்மங்கள் புதிய பாடத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
சந்திரசேகர கும்பாரா, நால்வடி கிருஷ்ண ராஜ உடையார், நாகேகவுடா, சித்தலிங்கய்ய சித்தேஸ்வர சுவாமிகள், சாந்தவேரி கோபாலகவுடா, கொப்பாலின், கவி மடத்தின் படங்கள், விபரங்கள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
சமூக அறிவியல் புத்தகத்தில், குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான விஷயங்கள், ஜனநாயகம், ஜனநாயகத்தின் முக்ககியத்துவம், புதிய பாடத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள், கடமைகள் அத்தியாயத்தில் திருத்தம் செய்து, குழந்தைகளின் உரிமைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
பூகோள வரைபடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மாவட்டம், தாலுகா, பேரூராட்சி சம்பந்தப்பட்ட புள்ளி விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
7ம் வகுப்பில் மாற்றப்பட்ட பாடத் திட்டங்கள்:
இந்தியாவுக்கு, ஐரோப்பியர்கள் வருகை, ஆங்கிலேயர் ஆட்சியின் பின் விளைவுகள் பாடங்களில் தெளிவை ஏற்படுத்தும் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மைசூரு மற்றும் மற்ற சமஸ்தானங்கள் அத்தியாயத்தில், 'சமுதாய மற்றும் தார்மீக மேம்பாடுகள்' சேர்க்கப்பட்டுள்ளன. சுதந்திர போராளிகள் அத்தியாயத்தில், மகளிர் சுதந்திர போராளிகள் பற்றிய தகவல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
பசவண்ணரை 'கலாசார தலைவன்' என, பதிவு செய்யப்பட்டுள்ளது. ரிலிஜியன்கள் என்ற தலைப்பு, தர்மங்கள் என, மாற்றப்பட்டுள்ளன.
8ம் வகுப்பில் மாற்றப்பட்ட பாடத் திட்டங்கள்:
சிந்து சமவெளி நாகரீகம் என்ற அத்தியாத்தின் தலைப்பு, புராதன இந்தியாவின் நாகரீகங்கள்: சிந்து சமவெளி நாகரீகம் மற்றும் வேதங்களின் காலம் என, மாற்றப்பட்டது. சனாதன தர்மம் என்ற அத்தியாயத்தில், சில அம்சங்கள் சேர்க்கப்பட்டன.
இதேபோன்று, ஒன்பதாவது, பத்தாவது வகுப்பின் பாட புத்தகங்களில், சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

