ADDED : ஜன 04, 2026 03:27 AM

புதுடில்லி: தனியார் தொலைக்காட்சி ஒன்றில், 'கோன் பனேகா குரோர்பதி' என்ற ஹிந்தி 'கு விஸ்' நிகழ்ச்சியை நடத்தி வருகிறார், நடிகர் அமிதாப் பச்சன். இது மிகவும் பிரபலமான நிகழ்ச்சி. இதில் பங்கேற்று, அமிதாப் எதிரே உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டு பதில் அளித்து ஒரு கோடி ரூபாய் வென்றோரும் உண்டு.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க ஏற்பாடுகள் நடக்கிறதாம். இந்த நிகழ்ச்சியில் அமிதாப் எதிரே உள்ள நாற்காலியில் பிரதமர் மோடி அமர்ந்து, அமிதாப் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வார் என சொல்லப்படுகிறது.
'இளம் பருவம் எப்படி கழிந்தது, ஆர்.எஸ்.எஸ்., உடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது, எப்படி அரசியலுக்கு வந்தார், பிரதமர் பதவி கடுமையானதா என, பல கேள்விகள் அமிதாப் கேட்பார்' என்கின்றனர்.
ஸ்டூடியோவில், நாற்காலியில் உட்கார்ந்து பதில் சொல்வதற்கு பதிலாக, குஜராத் கடற்கரையில் நடந்தவாறே மோடியும், அமிதாப்பும் உரையாட வேண்டும் என்றும் யோசனை சொல்லப்பட்டுள்ளதாம்.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டசபை தேர்தல் ஏப்ரல், -மே மாதங்களில் நடைபெற உள்ளது. அந்த சமயத்தில் மோடி- - அமிதாப் நிகழ்ச்சி வெளியானால், அரசியல் ரீதியாக, பா.ஜ.,விற்கு ஆதாயம் கிடைக்கும் எனவும் சொல்லப் படுகிறது.
ஆனால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பாக, பிரதமரிடமிருந்து இதுவரை எந்தவித பதிலும் இல்லையாம்.

