ADDED : அக் 16, 2024 10:29 PM

பெங்களூரு : பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, நேற்று ஜாமினில் வெளியே வந்தார்.
பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் முனிரத்னா, 60. இவர் மீது ராம்நகர் மாவட்டம், கக்கலிபுரா போலீஸ் நிலையத்தில், 40 வயது பெண், பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில், கடந்த செப்டம்பர் 18ம் தேதி, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே நாளில் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை, சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இதற்கிடையில், ஜாமின் கோரி, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் முனிரத்னா மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு, நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
அவரது வக்கீல்கள், நீதிமன்ற உத்தரவை நேற்று சிறை அதிகாரிகளிடம் தாக்கல் செய்தனர். இதையடுத்து, முனிரத்னாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டு, 29 நாட்களுக்கு பின், முனிரத்னா வெளியே வந்தார். பின், அவரது காரில் ஏறி, வயாலிகாவலில் உள்ள வீட்டுக்கு சென்றார். அங்கு, அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

