ADDED : பிப் 04, 2024 11:06 PM

ராம்நகர்: லோக்சபா தேர்தலில், கோலார் லோக்சபா தொகுதியில் போட்டியிடுவது குறித்து ம.ஜ.த., தலைவர்களுடன், மாநில தலைவர் குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் ம.ஜ.த., கூட்டணி அமைத்து உள்ளது. ம.ஜ.த.,வுக்கு சாதகமான தொகுதிகள் குறித்து அந்தந்த தொகுதி நிர்வாகிகளுடன், மாநில தலைவர் குமாரசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த வகையில், ராம்நகர் பிடதி அருகே கேடகனஹள்ளியில் உள்ள தனது பண்ணை வீட்டில், கோலார் மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர்களுடன் குமாரசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
கோலார் மாவட்டத்தில் கட்சி அமைப்பு, தேர்தல் ஏற்பாடுகள், பொருத்தமான வேட்பாளர்கள் குறித்து தகவல் கேட்டறிந்தார். இம்மாவட்டத்தில் ம.ஜ.த.,வுக்கு மூன்று எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால், சட்டசபை தேர்தலில் ஓட்டு சதவீதம் கணிசமாக அதிகரித்து இருந்தது.
வரும் லோக்சபா தேர்தலில், கோலார் லோக்சபா தோகுதியில் ம.ஜ.த., வேட்பாளரை நிறுத்தினால், எளிதாக வெற்றி பெறலாம். கூட்டணி குறித்து எந்த குழப்பமும் இல்லை. பரஸ்பரம் நல்லிணக்கம் மற்றும் ஒருமித்த சூழல் உள்ளது' என கட்சியினர் தெரிவித்தனர்.
இதற்கு குமாரசாமி, 'கோலாரில் ம.ஜ.த.,வுக்கு நல்ல சூழ்நிலை உருவாகி உள்ளது. பா.ஜ., இணைந்ததால், இன்னும் சாதகமான சூழல் உருவாகி உள்ளது.
தொகுதி பங்கீடு விவாதத்தின் போது, பா.ஜ., தலைவர்களுடன் விவாதிப்பேன்' என்றார்.
தற்போது கோலார் தொகுதி எம்.பி.,யாக பா.ஜ.,வின் முனிசாமி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

