தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்: உயர்த்தியது மத்திய அரசு
தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்: உயர்த்தியது மத்திய அரசு
ADDED : செப் 27, 2024 03:59 AM

புதுடில்லி: பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது; இது, அக்., 1 முதல் அமலுக்கு வருகிறது.
மத்திய அரசு, வி.டி. ஏ., எனப்படும் மாறுபடும் அகவிலைப் படியை, ஏப்., 1 மற்றும் அக்., 1ம் தேதிகளில் மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் திருத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை வெளியிட்டுள்ள செய்தி:
அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், வி.டி.ஏ., திருத்தப்பட்டுள்ளது. கடைசியாக, கடந்த ஏப்., மாதம் திருத்தப்பட்டது. விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து தற்போது திருத்தப்பட்டுள்ளது. இது, அக்., 1 முதல் அமலுக்கு வருகிறது.
கட்டுமானம், சுமை ஏற்றுதல் மற்றும் இறக்குதல், சுரங்கம், வேளாண் உட்பட பல்வேறு துறைகளில் உள்ள ஊழியர்கள், அவர்களுடைய திறன் அடிப்படையிலும் மற்றும் பணியாற்றும் இடத்தின் அடிப்படையிலும் பிரிக்கப்படுகின்றனர்.
கட்டுமானம், துப்புரவு பணியாளர்கள், சுமைகள் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் போன்ற திறன் சாராத பிரிவினருக்கு, குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம், 783 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
இதன்படி, மாதத்துக்கு, 20,358 ரூபாய் வருவாய் கிடைக்கும். குறைந்தபட்ச திறன் துறைகளில் பணியாற்றுவோருக்கு, ஒரு நாள் ஊதியம், 868 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதாவது மாதத்துக்கு, 22,568 ரூபாய் கிடைக்கும்.
திறன் சார்ந்த துறைகள், அலுவல் பணியாற்றுவோருக்கான ஒருநாள் ஊதியம், 954 ரூபாயாக உயர்கிறது. மாதத்துக்கு, 24,804 ரூபாய் கிடைக்கும். உயர் திறன் சார்ந்த துறைகளில் பணியாற்றுவோருக்கு, ஒருநாள் ஊதியம், 1,035 ரூபாயாகும். மாதத்துக்கு, 26,91-0 ரூபாய் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

