ADDED : ஏப் 10, 2025 04:04 AM
திருவனந்தபுரம் : கேரளாவில் அரபி படிக்க வந்த சிறுமியை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்த மதரசா ஆசிரியருக்கு, 187 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கேரளாவின் கண்ணுார் மாவட்டம், ஆலக்கோட்டையைச் சேர்ந்தவர் முகமது ராபி, 38; பாப்பினசேரி என்ற இடத்தில் அரபி மொழி கற்றுத் தரும் மதரசாவில் ஆசிரியராக பணிபுரிந்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன், இங்கு அரபி படிக்க வந்த 16 வயது மாணவியை, முகமது ராபி மிரட்டி பலாத்காரம் செய்தார்; வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டினார்.
இந்த விபரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் பழயங்காடி போலீசில் புகார் செய்தனர். முகமது ராபி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த தளிபறம்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி ராஜேஷ், முகமது ராபிக்கு, 187 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், 9 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

