ராமராஜ்ஜியம் துவங்கிவிட்டது; யாராலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங்
ராமராஜ்ஜியம் துவங்கிவிட்டது; யாராலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங்
ADDED : ஏப் 15, 2024 05:56 PM

ஸ்ரீநகர்: 'இந்தியாவில் ராம ராஜ்ஜியம் துவங்கிவிட்டது. அதை யாராலும் தடுக்க முடியாது' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்திய நாட்டவர் யாரும் குடியுரிமையை இழக்கப் போவதில்லை. பா.ஜ., அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சி அமைத்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பெண்களின் கண்ணியம் மற்றும் கவுரவத்தின் மீதான தாக்குதலை நாங்கள் ஏற்க முடியாது.
ராம ராஜ்ஜியம்
இந்தியாவில் ராம ராஜ்ஜியம் துவங்கிவிட்டது. அதை யாராலும் தடுக்க முடியாது. ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் தங்கள் கடமைகளை பொறுப்புடன் செய்யும் போது, அது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொது சிவில் சட்டம் செயல்படுத்தப்படும் என்று நாங்கள் உறுதியளித்துள்ளோம். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறி வருகிறது. இதை உலகமே ஒப்புக்கொள்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

