வீடு தேடி மதுபானம் வினியோகிக்கும் திட்டம்; கேரளா அரசுக்கு பரிந்துரை
வீடு தேடி மதுபானம் வினியோகிக்கும் திட்டம்; கேரளா அரசுக்கு பரிந்துரை
ADDED : ஆக 10, 2025 07:00 PM

திருவனந்தபுரம்: கேரளாவில் வீடு தேடி மதுபானங்கள் வினியோகிக்கும் திட்டம் அரசின் பார்வைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், கேரளாவில் குறைந்த எண்ணிக்கையிலான சில்லறை மதுபானக்கடைகள் உள்ளன. இருப்பினும், மதுபானங்கள் விற்பனையின் மூலம் கிடைக்க பெறும் வருவாய் என்பது அதிகமாகும்.
கடந்த 2023-24ம் நிதியாண்டில், மது விற்பனை மூலம் ரூ.19,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மாநில அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கான நிதி ஆதாரத்தில் இந்த வருவாய் பயன்படுத்தப்படுகிறது.
இந் நிலையில் கேரள மாநில பானங்கள் கார்ப்பரேஷன் லிமிடெட் (BEVCO) நிறுவனம் ஆன்லைன் மூலம் மதுபானங்களை வீட்டுக்கே வினியோகிக்கும் திட்டத்தை மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
சில்லறை விற்பனை நிலையங்களில் வருவாயை அதிகரிக்கவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. 23 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உள்ளவர்கள் மட்டுமே மதுபானங்களை ஆர்டர் செய்ய வேண்டும் என்ற பரிந்துரையும் அந்த திட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பரிந்துரை மாநில அரசின் பரிசீலனையில் இருந்தாலும், இதை அமல்படுத்த சட்டத்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
நாட்டில், மதுபானங்கள் வீடு தேடி என்ற திட்டம் முன் வைக்கப்படுவது அல்லது நடைமுறைப்படுத்துவது என்பது இது முதல்முறையல்ல. கொரோனா தொற்று காலத்தில் கேரளாவில் மதுக்கடைகளில் கூட்டத்தை தவிர்க்க, செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.