போலீஸ் ஸ்டேஷனில் இருந்தே சாட்சியம் கவர்னர் உத்தரவுக்கு வக்கீல்கள் எதிர்ப்பு
போலீஸ் ஸ்டேஷனில் இருந்தே சாட்சியம் கவர்னர் உத்தரவுக்கு வக்கீல்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 24, 2025 02:11 AM
புதுடில்லி,:நீதிமன்ற விசாரணையில், போலீஸ் ஸ்டேஷனில் இருந்தே, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக போலீஸ் அதிகாரிகள் சாட்சியம் அளிக்கலாம் என்ற துணை நிலை கவர்னரின் உத்தரவை எதிர்த்து, வழக்கறிஞர்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது.
வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நடக்கும் போது, சாட்சியம் அளிக்க வேண்டிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஸ்டேஷனில் இருந்தே ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் என துணைநிலை கவர்னர் சக்சேனா, 13ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
கவர்னரின் இந்த உத்தரவை எதிர்த்து டில்லியில் உள்ள அனைத்து நீதிமன்ற வழக்கறிஞர்களும் நேற்று முன் தினம் வேலை நிறுத்தப் போராட்டம் துவக்கினர். இந்தப் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது.
வழக்கறிஞர்களின் இந்தப் போராட்டத்துக்கு, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் விகாஸ் சிங் கூறியதாவது:
துணைநிலை கவர்னர் சக்சேனா பிறப்பித்துள இந்த உத்தரவு தன்னிச்சையானது; சட்டவிரோதமானது. நீதியின் கொள்கைகளுக்கு எதிரானது. நீதித்துறை செயல்முறையின் புனிதத்தை இழிவு படுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கவர்னர் திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சங்கச் செயலர் பிரக்யா பாகேல் கூறுகையில், “துணைநிலை கவர்னர் சக்சேனாவின் இந்த உத்தரவு, நீதித்துறையின் சுதந்திரத்தையும், நிர்வாகத்தையும் கடுமையாகப் பாதிக்கும். இது, பொது நலனுக்கு உகந்ததல்ல. நீதித்துறையின் நலன் கருதி, இந்த உத்தரவை துணைநிலை கவர்னர் தன் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்,” என்றார் .
உயர் நீதிமன்றம் துணைநிலை கவர்னர் சக்சேனாவின் உத்தரவுக்கு டில்லி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நியாயமான விசாரணைக்கு எதிரான இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என, சங்க நிர்வாகக் குழு வலியுறுத்தியுள்ளது.