ADDED : மார் 12, 2024 11:14 PM

ராம்நகர் : ''குமாரசாமி முதல்வராக இருந்த போது, அரசு அதிகாரிகள் மோசமாக நடத்தப்பட்டனர்'' என்று, ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹுசைன் கூறினார்.
ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
துணை முதல்வர் சிவகுமார், காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் ஆகியோரை திருடர்கள் என்று, முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார். அந்த வார்த்தை குமாரசாமிக்கே பொருந்தும். எப்படி அரசியல் செய்ய வேண்டும்; எப்படி மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று, காங்கிரசுக்கு நன்கு தெரியும்.
நான் ஒரு முஸ்லிம். அன்பு, நீதி அடிப்படையில் ராம்நகர் தொகுதி மக்கள், என்னை எம்.எல்.ஏ., ஆக்கினர். ஜாதி, மதம், பேதங்களை மறந்து பணியாற்றுகிறேன். எனது தொகுதியில், எங்கு சென்றாலும், மக்கள் என்னை கொண்டாடுகின்றனர். வளர்ச்சி பணிகள் மட்டும் எனது குறிக்கோள். அதிகாரத்தை விரும்புபவன் நான் இல்லை. என் மீது உள்ள நம்பிக்கையால் ராம்நகர் ம.ஜ.த., தொண்டர்கள், காங்கிரசில் இணைகின்றனர்.
கமிஷன் புகார்
ராம்நகரில் அதிகாரிகள் இடமாற்றத்தில் கமிஷன் வாங்கப்படுவதாக, குமாரசாமி கூறுகிறார். அவர் முதல்வராக இருந்தபோது பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகளிடம் கூட, பணம் பறித்து உள்ளனர். அதிகாரிகளை மோசமாக நடத்தினர். இதுபற்றி அதிகாரிகளே எங்களிடம் கூறினர்.
எனக்கு தேவையானதை கடவுள் கொடுத்து உள்ளார். எதற்காக, நான் கமிஷன் வாங்க வேண்டும். என் மீதான கமிஷன் குற்றச்சாட்டை நிரூபித்தால், அரசியலில் இருந்து வெளியேறுகிறேன். ராம்நகர் மக்கள் முகத்தை கூட பார்க்க மாட்டேன்.
கர்நாடகா அரசியலில், குமாரசாமியை வெளியுலகிற்கு காட்டியது ராம்நகர் மக்கள் தான். அவருக்கு ஆட்சி, அதிகாரம் கிடைத்ததும் இந்த மக்களால் தான். ஆனால் அவர் மக்களை பற்றி யோசிக்கவே இல்லை.
ஈகோ வந்தது
திருடர்கள், கொள்ளைக்காரர்கள் இந்த வார்த்தை மட்டும் தான், குமாரசாமி வாயில் இருந்து வரும். அதுபோன்ற வார்த்தைகள் எங்களிடம் இருந்து வராது.
ராம்நகர் எம்.எல்.ஏ.,வாக, அவரது மனைவி அனிதா இருந்த போது, ஏராளமான வளர்ச்சி பணிகள் நடந்து உள்ளன என்று குமாரசாமி கூறி உள்ளார். வளர்ச்சி பணிகள் செய்தால், மக்கள் உங்களை ஏன் கைவிட்டனர்.
ஆட்சி, அதிகாரம் கிடைத்ததும் உங்களுக்கு 'ஈகோ' வந்தது. ராம்நகரில் ஒரு ரோடு கூட போடவில்லை. அரசியலுக்காக குமாரசாமி ஏதேதோ பேசுகிறார்.
ம.ஜ.த., கொள்கையை மறந்து, ம.ஜ.த.,வின் செய்தி தொடர்பாளர் ஆகி விட்டார். டாக்டர் மஞ்சுநாத் நல்ல மனிதர். அவரை அரசியலுக்கு அழைத்து வந்து, 'பலிகடா' ஆக்க பார்க்கின்றனர். காங்கிரஸ் அரசின் வாக்குறுதியால், பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

