கேரளாவில் வங்கி கணக்குக்கு வாடகை தருவதாக 'பகீர்' மோசடி!; வயநாட்டில் 500க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு
கேரளாவில் வங்கி கணக்குக்கு வாடகை தருவதாக 'பகீர்' மோசடி!; வயநாட்டில் 500க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு
ADDED : செப் 10, 2025 04:19 AM

வயநாடு : கேரளாவின் மலை மாவட்டமான வயநாட்டில், வங்கி கணக்கை வாடகைக்கு விட்டால் பணம் தருவதாக ஆசை காண்பித்து, ஒரு கும்பல் நுாதன மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதனால், 500க்கும் மேற்பட்ட இளைஞர்களும், பெண்களும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
இயற்கை சீற்றம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளில் இருந்து கேரளாவின் வயநாடு மாவட்டம் மெல்ல மீண்டு வருகிறது. இந்நிலையில், அந்த மக்களின் வாழ்க்கையை புரட்டி போடும் அளவுக்கு நுாதன மோசடி நடந்திருப்பது, அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
உள்ளூரில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் அவர்களது வங்கி கணக்கை வாடகைக்கு எடுக்க, மாதம் 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் தருவதாக ஒரு கும்பல் ஆசை காண்பித்துள்ளது.
இதை நம்பி அவர்களும் வங்கி கணக்கு விபரங்கள், ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை வரும் கடவு எண் உள்ளிட்ட தகவல்களை பரிமாறியுள்ளனர்.
அதிர்ச்சி
கடைசியில் வங்கிக் கணக்கு விபரங்களை வாடகைக்கு விட்டவர்களை தேடி, போலீசார் அவர்களது வீட்டு கதவை தட்டியபோது தான், மிகப்பெரிய சதிவலையில் சிக்கியிருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.
சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றத்துக் காக அவர்களது வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாக போலீசார் கூறியபோது அனைவரும் அதிர்ந்து போயினர்.
இதனால், வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்ட சிலர், தற்போது வழக்கை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுவும் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அவர்கள் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து சைபர் போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
வயநாட்டின் கம்பலக்காடு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஆறு பேர் மீது, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. அவர்களில் இஸ்மாயில் என்ற 27 வயது இளைஞரை நாகாலாந்து போலீசார் ஏற்கனவே கைது செய்து, கோஹிமாவுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
அதே போல் முகமது பனிஷ், 28, என்ற இளைஞருக்கு, உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் போலீஸ் சம்மன் அனுப்பி இருக்கிறது. அவரது வங்கிக் கணக்கு மூலம் முறைகேடான வழியில், 58,000 ரூபாய் அளவுக்கு பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக வழக்கு பதிவாகியுள்ளது.
கதறல் உள்ளூர் பெண்ணான சல்மாத் மீதும் உ.பி.,யின் லக்னோ போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பணத்திற்கு ஆசைப்பட்டு, சல்மாத்தின் வங்கி கணக்கு விபரங்களை அவரது தம்பி, மோசடிக்காரர்களிடம் பகிர்ந்ததால் தற்போது அவர் வழக்கில் சிக்கியிருக்கிறார்.
சுலபமாக பணம் கிடைக்கிறது என்ற ஆசையில் இப்படி வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விட்டு, 500க்கும் மேற்பட்டோர் மிகப்பெரிய பிரச்னையில் சிக்கியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரத்திலும் இதே போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இதற்கிடையே, கைது செய்யப்பட்டு நாகாலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இஸ்மாயில் என்ற இளைஞரின் கதி என்னவானது தெரியவில்லை என, அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
'இஸ்மாயிலை, எட்டு நாட்களுக்கு முன் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவருக்கு என்னவானது என இதுவரை தெரியவில்லை. பணப்பரிமாற்றம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது.
கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபாய் வரை சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்ததாக போலீசார் கூறுகின்றனர். ஜாமினில் எடுப்பதற்கு கூட எங்களிடம் பணம் இல்லை' என கதறுகின்றனர்.
வயநாட்டில் உள்ளூர் மக்களை அணுகி, வங்கிக் கணக்கு விபரங்களை வாடகைக்கு எடுப்பதற்கென்றே இடைத்தரகர் ஒருவர் கம்பலக்காடு பகுதியில் வசிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.