காஷ்மீரில் மின்சார ரயில் சேவை: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பரூக் அப்துல்லா
காஷ்மீரில் மின்சார ரயில் சேவை: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பரூக் அப்துல்லா
UPDATED : பிப் 20, 2024 04:03 PM
ADDED : பிப் 20, 2024 04:01 PM

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் முதல் மின்சார ரயில் சேவையை இன்று துவக்கி வைத்த பிரதமர் மோடிக்கு, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா நன்றி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் சங்கல்தான் என்ற இடத்தில் இருந்து பாரமுல்லா வரையிலான மின்சார ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். காஷ்மீரில் இயக்கப்படும் முதல் மின்சார ரயில் இது. இது மொத்தம் 272 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியது. இதில் 161 கிலோமீட்டர் வழித்தடம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. 16 பாலங்கள், 11 சுரங்கங்களை உள்ளடக்கிய 48.1 கிலோமீட்டர் நீளமுள்ள உதம்பூர் - ஸ்ரீநகர் - பராமுல்லாவை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அவசர காலங்களில் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக மூன்று தப்பிக்கும் சுரங்கங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்துவதற்காக, சிசிடிவி கண்காணிப்பு போன்ற பல மேம்பட்ட அம்சங்களும் இந்த வழித்தடத்தில் இருக்கும்.
இது குறித்து தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கூறிதாவது: எங்களுக்கு ரயில் சேவை தேவைப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு முக்கியமானது. இது ஒரு பெரிய நடவடிக்கை. இதற்காக ரயில்வே அமைச்சகத்துக்கும், பிரதமர் மோடிக்கும் எனது வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

