ஓராண்டு தர வேண்டிய காவிரி நீர் 81 நாளில் வழங்கியது கர்நாடகா
ஓராண்டு தர வேண்டிய காவிரி நீர் 81 நாளில் வழங்கியது கர்நாடகா
ADDED : ஆக 23, 2025 07:04 AM

சென்னை: கொட்டி தீர்த்த மழை காரணமாக, தமிழகத்திற்கு ஓராண்டில் வழங்க வேண்டிய காவிரி நீரை, 81 நாட்களில் கர்நாடகா வழங்கியுள்ளது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.2 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை காலம் துவங்கும் ஜூன் மாதம், நீர் வழங்கும் தவணை காலமும் துவங்கும்.
அடுத்த ஆண்டு மே மாதம் தவணை காலம் முடியும். அதன்படி ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி., நீரை கர்நாடகா வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 42.2 டி.எம்.சி., நீர் கிடைத்தது. ஜூலை மாதம் 31.2 டி.எம்.சி.,க்கு பதிலாக, 103 டி.எம்.சி., நீர் கிடைத்தது. நடப்பு ஆகஸ்ட் மாதம் 45.9 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். கடந்த 20 ம் தேதி நிலவரப்படி, 37 டி.எம்.சி., நீர் கிடைத்து உள்ளது.
ஜூன் முதல் ஆகஸ்ட் 20ம் தேதி வரை, 182 டி.எம்.சி., நீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. ஓராண்டில் வழங்க வேண்டிய நீரை, 81 நாட்களில் கர்நாடகா வழங்கி உள்ளது. கர்நாடகாவில் கொட்டி தீர்த்த தென்மேற்கு பருவமழையால், தமிழகத்திற்கு அதிக நீர் கிடைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த கால கட்டத்தில், 70 டி.எம்.சி., நீர் மட்டுமே கிடைத்திருக்க வேண்டும்; கூடுதலாக 112 டி.எம்.சி., நீர் கிடைத்துள்ளது. மழை கார ணமாக, கூடுதல் தண்ணீர் வழங்கப்பட்டாலும், அதற்கடுத்த மாதங்களில், உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ள தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும். தற்போது, தென்மேற்கு பருவமழை காலமாக இருப்பதால், வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன.