ADDED : ஜூலை 15, 2025 10:23 PM
புதுடில்லி:'கன்வார் யாத்திரை நடப்பதை முன்னிட்டு, யாத்ரீகர்களின் பாதுகாப்பு கருதி, காலிண்டி கஞ்ச் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், 23ம் தேதி வரை போக்குவரத்து தடை செய்யப்படும்' டில்லி மாநகரப் போலீசின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து போலீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கன்வார் யாத்திரை நடக்கிறது. ஏராளமான யாத்ரீகர்கள் நொய்டா, காலிண்டி கஞ்ச் மற்றும் ஆக்ரா கால்வாய் சாலை வழியாக பரிதாபாத், குருகிராம் மற்றும் ராஜஸ்தான் நோக்கி நடந்து செல்கின்றனர்.
ஆக்ரா கால்வாய் சாலையில், காலிண்டி கஞ்ச் பதர்பூர் அருகே சாலையின் ஒரு பகுதியில், 23ம் தேதி வரை வாகனப் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. அதேபோல, காலிண்டி கஞ்ச்சில் இருந்து நொய்டா சாலையின் ஒரு பகுதியிலும் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.
நொய்டாவில் இருந்து டில்லிக்கு செல்ல காலிண்டி கஞ்ச் மற்றும் பதர்பூர் வழியாக ஆசிரமம் மற்றும் டி.என்.டி.,க்கு செல்லும் மதுரா சாலைக்குப் பதிலாக, டி.என்.டி., மேம்பாலம் அல்லது ஆசிரம சாலையை பயன்படுத்தலாம்.
போக்குவரத்து தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு படையினர் மற்றும் போலீஸ் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.