உடல்நலக் காரணங்களுக்காகவே ஜக்தீப் தன்கர் ராஜினாமா; வேறு காரணமில்லை என்கிறார் அமித்ஷா
உடல்நலக் காரணங்களுக்காகவே ஜக்தீப் தன்கர் ராஜினாமா; வேறு காரணமில்லை என்கிறார் அமித்ஷா
UPDATED : ஆக 25, 2025 03:02 PM
ADDED : ஆக 25, 2025 10:53 AM

புதுடில்லி: ''உடல்நலக் காரணங்களுக்காகவே துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். வேறு காரணம் இல்லை'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு, அமித்ஷா அளித்த பேட்டி: பார்லிமென்டிற்குள் சபாநாயகர் உத்தரவின் பேரில் சிஐஎஸ்எப் படையினர் நுழைவார்கள். அவர்களுக்கு (எதிர்க்கட்சிகள்) சாக்குப்போக்குகள் தேவை. அவர்கள் பொதுமக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள். தேர்தலில் தொடர் தோல்விகளால் விரக்தி அடைந்துள்ளனர். இதன் விளைவாகவே பொது அறிவை இழந்து பேசுகின்றனர்.
கண்ணியம்
நான் முழு நாட்டையும், எதிர்க்கட்சியையும் கேட்க விரும்புகிறேன். ஒரு முதல்வர், பிரதமர் அல்லது எந்த தலைவரும் சிறையில் இருந்து நாட்டை நடத்த முடியுமா? அது நமது ஜனநாயகத்தின் கண்ணியத்திற்கு ஏற்றதா? 130வது திருத்தம் பற்றி நான் முழு நாட்டிற்கும் சொல்ல விரும்புகிறேன். இந்த திருத்தத்தில் பிரதமர், முதல்வர் அல்லது மாநில அரசாங்கத்தின் எந்த தலைவரும் சிறை சென்றால் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இரட்டை நிலைப்பாடு
அவர்கள் ராஜினாமா செய்யவில்லை என்றால், அவர்கள் சட்டப்படி பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள். இதை தான் 130வது திருத்தத்தில் நாங்கள் சேர்த்துள்ளோம். பதவி நீக்க மசோதா நிறைவேற்றப்படும். ராகுல் பீஹாரில் ஆட்சி அமைக்க தண்டனை பெற்ற லாலு யாதவை கட்டிப்பிடிக்கிறார். இது இரட்டை நிலைப்பாடு இல்லையா? காங்கிரஸ் கட்சியினர் மக்களிடையே ஒருவித மாயையை உருவாக்க விரும்புகிறார்கள். அவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
ராஜினாமா ஏதுக்கு?
முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் திடீர் ராஜினாமா விவாதத்துக்கு உள்ளான நிலையில், முதல் முறையாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அமித்ஷா கூறியதாவது:
உடல்நலப் பிரச்னையால் தனிப்பட்ட முறையில் ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார். தமது பதவிக்காலத்தில் அரசியலமைப்பு விதிப்படி தன்கர் சிறப்பாக பணியாற்றினார். ஜக்தீப் தன்கரின் ராஜினாமாவுக்கு வேறு காரணங்களைத் தேடுவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.