sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அப்படிப்பட்டவரா அத்வானி!

/

அப்படிப்பட்டவரா அத்வானி!

அப்படிப்பட்டவரா அத்வானி!

அப்படிப்பட்டவரா அத்வானி!

9


UPDATED : ஜன 29, 2026 07:02 AM

ADDED : ஜன 26, 2026 06:57 AM

Google News

9

UPDATED : ஜன 29, 2026 07:02 AM ADDED : ஜன 26, 2026 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜனவரி 1, 2004

வழக்கம்போல எங்களுடைய என்.டி.டி.வி., அலுவலகத்திலும் கொண்டாட்டம்தான். வாசலில் பலூன்கள்... பளபள உடையுடன் ரிசப்சனிஸ்ட்கள் என அலுவலகமே புதிதாக இருந்தது. புத்தாண்டு வாழ்த்துக்களை அனைவரும் ஒருவக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். செய்தி ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் சிரித்த முகத்துடன் வந்து அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். வட்ட வடிவமான மேஜை அமைப்பு எங்கள் அலுவலகத்தில் உண்டு. மத்தியில் ராஜ்தீப் உட்கார்ந்து கொள்ள, நாங்கள்- நிருபர்கள் சூழ்ந்து நின்று கொண்டோம்.

இன்றைக்கு யாராவது ஒரு விஐபியை பார்த்தால் என்ன?- ராஜ்தீப் கேட்டவுடன்...பலரும் பல பெயர்களைச் சொன்னார்கள். அப்போது பாஜ கூட்டணி ஆட்சி, வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அத்வானியைப் பார்த்தால் என்ன? ராஜ்தீப்பின் கேள்வி அனைவரையும் பரபரப்பாக்கியது.

''ஆனால் ஒரு பிரச்னை,'' என ஒரு புதிர் போட்டார் ராஜ்தீப்.

''நான் கேட்டால் நிச்சயம் அப்பாயின்ட்மென்ட் தர மாட்டார் அத்வானி,'' என்றார் அவர். காரணம், பாஜ அரசுக்கு எதிராக, குறிப்பாக துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமாக இருந்த அத்வானிக்கு எதிராக பல விவாதங்களையும் ஸ்டோரிகளையும் ராஜ்தீப் செய்துள்ளார். இதனால்தான் அப்படி சொன்னார்.

''ஆனால் விஜய் திரிவேதி உதவ முடியும்,'' என ராஜ்தீப் சொல்ல நாங்கள் அனைவரும் விஜயை நோக்கினோம். எங்களுடைய ஹிந்தி செய்தி சேனலின் செய்தி ஆசிரியர் விஜய் திரிவேதி. இவருடைய மாமனார் ராஜ்ய சபாவில் பாஜ எம்பியாக அப்போது இருந்தார். இதனால் பாஜவில் என்ன நடக்கிறது என்பது விஜய்க்கு தெரியும். அதோடு, அத்வானி, வாஜ்பாய் உட்பட சீனியர் பாஜ தலைவர்களுடன் பேசக் கூடியவர் விஜய். ஆனால் இதற்காக பாஜ ஆதரவாக எப்போதும் விஜய் செயல்பட்டதில்லை.

சரி போகலாம் என சொன்ன விஜய், அத்வானியுடன் பேச முயற்சித்தார். ஆனால் அவருடைய தொலைபேசி பிஸியாக இருந்ததால் பேச முடியவில்லை.

''நேராக போய் அத்வானிக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாமே,'' என்றார் விஜய்.

“ஆனால் நம் அனைவரையும் சந்திப்பாரா? முடியாது என சொல்லிவிட்டால் என்ன செய்வது...,” என்று சந்தேகத்தை கிளப்பினார் ராஜ்தீப். கடைசியில் அனைவரும் போவது என முடிவு செய்தோம்.

டென்ஷன் நேரம்

ராஜ்தீப், விஜய், நான் இன்னும் சில நிருபர்கள் என ஒரு 8 பேர் தயாரானோம். அத்வானியின் பங்களா இந்தியா கேட் அருகே பிருத்விராஜ் சாலையில் இருந்தது. இப்போதும் அவர் அங்குதான் வசிக்கிறார். அவருடைய வீட்டு வாசலை அடைந்தோம். வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டி எங்களை யார் என கேட்டார். “என் பெயரைச் சொன்னால் நிச்சயம் பார்க்க மாட்டார்” என சொன்ன ராஜ்தீப் விஜய்யை கை காட்டினார்.

விஜய் திரிவேதி தன் பெயரைச் சொல்லி, உடன் சிலர் வந்திருப்பதாகவும், புத்தாண்டு வாழ்த்த சொல்லத்தான் வந்திருக்கிறோம் என்றும், செக்யூரிட்டியிடம் தகவல் சொன்னார்.

உடனே இது உள்ளே தெரிவிக்கப்பட்டது. 5 நிமிடங்கள் ஆனது. வீட்டிலிருந்து எந்த தகவலும் இல்லை. “நம்மை சந்திப்பார் என்பது சந்தேகம்தான்” என எங்களுக்குள் பேசிக் கொண்டோம். இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம், என்றார் ராஜ்தீப். எங்களுக்கோ ஒரே டென்ஷன். பார்லிமென்டில் பல முறை அத்வானியைப் பார்த்திருக்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் சந்தித்தது இல்லை. கூட்டத்தோடு கூட்டமாக பார்த்ததுதான்.

வரவேற்பு

நாங்கள் கிளம்பலாம் என யோசித்த வேளையில், ''நீங்கள் உள்ளே போகலாம், சாப் உங்களை அழைக்கிறார்,” என்று செக்யூரிட்டி சொன்னார். சந்தோஷத்தோடு உள்ளே சென்றோம். டில்லியில் அரசு பங்களாக்கள் மிகவும் விசாலமானவை. முன்னால் ஒரு தோட்டம். நடுவில் வீடு, பிறகு பின்னாலும் ஒரு பெரிய தோட்டம் உண்டு. காலையில் வாக்கிங் போக வெளியே செல்ல வேண்டாம். இவற்றைப் பராமரிக்க பல தோட்டக்காரர்கள் உண்டு.

வீட்டில் உள்ள இந்த தோட்டத்தில் நடந்தாலே போதும். அத்வானியின் பங்களாவும் இப்படித்தான் இருந்தது. “நமக்கு முன்னால் விஜய் போகட்டும்…நாம் அவரைப் பின் தொடர்வோம்... அத்வானியின் கண்களுக்கு முதலில் தெரிவது விஜய்யாக இருக்க வேண்டும்...,” என்றார் ராஜ்தீப். விஜய் திரிவேதி முன்னால் செல்ல நாங்கள் பின்னால் சென்றோம். அத்வானியின் அந்தரங்க செயலர் தீபக் சோப்ரா எங்களை வரவேற்றார். ராஜ்தீப்பை பார்த்ததும் அவர் முகம் மாறியது. இருந்தாலும் புன்னகையுடன், 'வாங்க வாங்க' என்றார்.

நூலகம்

வரவேற்பறையில் அத்வானி இருந்தார். நல்ல உயரம். வட இந்திய ஸ்டைலில் தார்ப்பாச்சி வேஷ்டி கட்டியிருந்தார். வெள்ளை ஜிப்பா. அதன் மேல் ஒரு அரைக்கை கோட். கம்பீரமாக நின்றார். அனைவரும் நமஸ்தே சொல்லி, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தோம். பதிலுக்கு அத்வானியும் எங்களை வாழ்த்தினார். “என்ன ராஜ்தீப் சவுக்கியமா...,” என்றார். அதற்குள் அத்வானியின் மனைவி கமலா அறைக்குள் வந்தார். அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தோம்.

சென்றிருந்த அனைவரைப் பற்றியும், 'என்ன செய்கிறீர்கள்' என கேட்டு தெரிந்து கொண்டார் அத்வானி. நாட்டு நடப்பை பேசிக் கொண்டே, 'என் லைப்ரரியைப் பார்க்கிறீர்களா' என எங்களை பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றார் அத்வானி. அறை முழுக்க கண்ணாடி போட்ட மர பீரோக்கள். புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஆங்கிலம், ஹிந்தி, உருது, சிந்தி என பல மொழிகளில் புத்தங்களைப் பார்க்க முடிந்தது. உண்மையிலேயே அது ஒரு பெரிய நூலகம் தான்.

“இங்கிருக்கும் அனைத்து புத்தகங்களையும் நீங்கள் படித்துவிட்டீர்களா,” என, நாங்கள் கேட்டோம். “எல்லாவற்றையும் படிக்கவில்லை. சிலவற்றை படித்துள்ளேன். இப்போது கூட ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார், அத்வானி. “துணை பிரதமரோடு உள்துறை அமைச்சக வேலையையும் பார்க்கும் உங்களுக்கு புத்தகம் படிக்க நேரம் உண்டா” என்றோம், நாங்கள். “தினமும் புத்தகம் படிக்க நேரத்தை ஒதுக்கி விடுகிறேன். அந்த நேரத்தில் படிப்பேன்” என்றார், அவர்.

பாயசமும், கமலாவின் கேள்வியும்

நூலகத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்ததும், 'எல்லோரும் இங்கே வந்து அமருங்கள்' என கட்டளையிட்டார் கமலா அத்வானி. ஆச்சர்யத்துடன் அவரைப் பார்த்துவிட்டு அமர்ந்தோம். ஒரு வேலையாள் ஒரு பெரிய தட்டைக் கொண்டு வந்தார். அதில் சின்ன கப்கள் இருந்தன. “இன்றைக்கு புத்தாண்டு. நானே செய்த கீர் (பாயசம்) சாப்பிடுங்கள்” என அன்போடு சொன்னார் கமலா. அனைவரும் பாயசத்தைப் பருகினோம். அருமையாக இருந்தது.

“பாயசம் அருமை'' ஒரே குரலில் நாங்கள் பாராட்ட, மகிழ்ச்சியடைந்தார் கமலா. ராஜ்தீப் அருகில் வந்து, “ராஜ்தீப்…அத்வானி சாப் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என நீ எப்போதும் டிவியில் சொல்கிறாய். அது தப்பு... அத்வானி அப்படிப்பட்டவர் அல்ல,” இதைச் சொல்லும் போது கமலா அத்வானியின் முகத்தில் கவலை தெரிந்தது.

ராஜ்தீப் அமைதியாக இருந்தார். இந்த அமைதியைக் கலைத்தார் அத்வானி.

“நானும் கமலாவும் விமானத்தில் ஒன்றாக பயணம் செய்தது கிடையாது” என்றார், அத்வானி.

“ஆச்சர்யமாக இருக்கிறதே” என்றோம். “கமலாவுக்கு விமான பயணம் என்றால் அலர்ஜி. எனவே எங்கு நாங்கள் ஒன்றாக சென்றாலும் ரயில்தான்” என்றார், அவர். கமலா அத்வானியின் முகத்தில் லேசான புன்னகை. இப்படி சுமார் ஒரு மணி நேரம் கழிந்த பிறகு அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு ஆபீசுக்கு திரும்பினோம். இதன் பிறகு அத்வானியை தனியாக சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. கமலா அத்வானி காலமாகிவிட்டார்.

நினைவுகள் தொடரும்!



- அ.வைத்தியநாதன்

Image 1526903

அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.

தொடர்புக்கு: vaithi@dinamalar.in






      Dinamalar
      Follow us