காப்பீடு நிறுவனங்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ., 'கிடுக்கி': குறைதீர் அலுவலரை நியமிப்பது கட்டாயமாகிறது
காப்பீடு நிறுவனங்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ., 'கிடுக்கி': குறைதீர் அலுவலரை நியமிப்பது கட்டாயமாகிறது
ADDED : ஆக 05, 2025 04:12 AM

புதுடில்லி: காப்பீட்டு துறையில் மிக முக்கியமான நடவடிக்கையை, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் எடுத்திருக்கிறது.
அதாவது 50 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீடு உரிமை கோரும் காப்பீடுதாரர்களின் புகார்களை விசாரிக்க, குறைதீர் அதிகாரியை நியமனம் செய்வதற்கான புதிய வரைவு கருத்துருவை அறிமுகம் செய்துள்ளது.
நாடு முழுதும் பொதுத்துறை மற்றும் தனியார் துறைகள் சார்பில் காப்பீட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை ஐ.ஆர்.டி.ஏ.ஐ., கண்காணித்து வருகிறது.
அதன்படி நுகர்வோர் குறைதீர் பணிகளை வலுவாக்கும் வகையில் 'உள் நிறுவன குறைதீர் முறை' என்ற வரைவு கருத்துருவை அறிமுகம் செய்திருக்கிறது.
அனுமதி அதன் விபரம்:
காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுக்கென தனி குறைதீர் அதிகாரியை நியமித்துக் கொள்ளலாம். இந்த அதிகாரி சம்பந்தபட்ட நிறுவனத்தில் காப்பீடு செலுத்திய காப்பீடுதாரர்களின் உரிமைகள் குறித்த குறைகளை களைய வேண்டும்.
குறிப்பாக, 50 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீடு உரிமை கோருதலில் ஏற்படும் குறைகளை வெளிப்படையாகவும், நியாயமாகவும் தீர்த்து வைக்க வேண்டும்.
இந்த புதிய விதி, மூன்று ஆண்டுகளுக்கு மேல் செயல்பாட்டில் உள்ள காப்பீட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அதே போல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் வைத்திருக்கும் காப்பீட்டு நிறுவனங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட குறைதீர் அதிகாரிகளை நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக பொதுமக்கள், காப்பீட்டு நிறுவனங்கள், தொழில்துறை வல்லுநர்கள் வரும் 17ம் தேதி வரை கருத்துகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய கருத்துரு காப்பீட்டு துறையில் ஏற்படும் குறைகளுக்கு தீர்வு காண நீதிமன்றங்களையோ அல்லது நுகர்வோர் குறைதீர் மன்றங்களையோ பொதுமக்கள் நாட வேண்டி இருக்கிறது.
அதை தவிர்க்கும் வகையில், இந்த புதிய கருத்துருவை ஐ.ஆர்.டி.ஏ.ஐ., முன்வைத்திருக்கிறது.