பொய் வழக்கு போட்ட ஐ.பி.எஸ்.,சுக்கு 'குட்டு' :கணவரிடம் மன்னிப்பு கேட்க உத்தரவு
பொய் வழக்கு போட்ட ஐ.பி.எஸ்.,சுக்கு 'குட்டு' :கணவரிடம் மன்னிப்பு கேட்க உத்தரவு
ADDED : ஜூலை 24, 2025 06:25 AM
புதுடில்லி: 'கணவர், மாமனார் மீது பொய் வழக்கு பதிந்து, 100 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைத்த ஐ.பி.எஸ்., அதிகாரி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
ஐ.பி.எஸ்., பெண் அதிகாரி ஒருவர் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு, குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தவிர கணவர் மற்றும் அவரது குடும்பத் தாருக்கு எதிராக கிரிமினல் வழக்கும் பதிவு செய்தார். பதிலுக்கு கணவர் தரப்பிலும் மனைவியான ஐ.பி.எஸ்., பெண் அதிகாரி மீது வழக்குத் தொடரப் பட்டது.
இந்த வழக்குகளை தங்கள் சொந்த ஊருக்கு மாற்றக்கோரி இரு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பொய் வழக்கு பதிந்து கணவர் மற்றும் மாமனாரை சிறைக்கு தள்ளிய அந்த பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஐ.பி.எஸ்., அதிகாரியான மனைவி தொடர்ந்த பொய் வழக்கால், கணவர் 109 நாட்களும், மாமனார் 103 நாட்களும் சிறையில் தண்டனை அனுபவித்துள்ளனர். அவர்கள் அடைந்த வேதனைக்கு நிவாரணமாக எதையும் வழங்க முடியாது.
எனவே, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அந்த பெண், கணவரிடமும், அவரது குடும்பத்தினரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.
இது தொடர்பான செய்தி பிரபல ஆங்கில மற்றும் ஹிந்தி நாளிதழ்களில் வெளியாக வேண்டும்.
இந்த உத்தரவு பிறப்பித்த மூன்று தினங்களுக்குள் மன்னிப்பு கோரிய விவகாரத்தை சமூக ஊடகங்களிலும் பதிவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.