பரம்பரை வரி: சாம்பித்ரோடா பேட்டிக்கு பா.ஜ., கடும் கண்டனம்: தனிப்பட்ட கருத்து என காங்., சமாளிப்பு
பரம்பரை வரி: சாம்பித்ரோடா பேட்டிக்கு பா.ஜ., கடும் கண்டனம்: தனிப்பட்ட கருத்து என காங்., சமாளிப்பு
UPDATED : மே 08, 2024 01:10 PM
ADDED : ஏப் 24, 2024 04:13 PM

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் சாம் பித்ரோடா, அமெரிக்காவில் விதிக்கப்படும் பரம்பரை வரி குறித்து தெரிவித்த கருத்துக்கு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் விவாதமாகியது. இதனையடுத்து சாம் பித்ரோடாவின் கருத்து, அவரது தனிப்பட்டது என காங்கிரஸ் கூறியுள்ளது.
விவாதம்
காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான சாம் பித்ரோடா டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‛‛அமெரிக்காவில் பரம்பரை வரி என்று ஒன்று இருக்கிறது. ஒருவருக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சொத்துகள் இருந்தால், அதில் அவருடைய வாரிசுகள் 45 சதவீதத்திற்கு மட்டுமே உரிமை கோரி, பெற முடியும். 55 சதவீதத்தை அரசு எடுத்துக் கொள்ளும். இந்தியாவில் அப்படி ஏதும் இல்லை. ஒருவருக்கு ரூ.100 கோடி சொத்து இருந்தால், அத்தனையும் வாரிசுகளுக்கே சென்றடையும். இதுபோன்ற விஷயங்களை விவாதிக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.
கண்டனம்
சத்தீஸ்கரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் சாம் பித்ரோடாவின் கருத்தை பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.
அவர் பேசுகையில், ‛ காங்., அரச குடும்பத்தின் இளவரசரின் ஆலோசகர், நடுத்தர மக்களுக்கு அதிக வரி விதிப்போம் என முன்பு கூறினார். தற்போது அதற்கு ஒரு படி மேலே சென்று பரம்பரை வரி விதிக்கப் போவதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது. பெற்றோர்களிடம் இருந்து பெறும் சொத்துகளுக்கு வரி விதிக்கப் போவதாக கூறுகிறது.
இதனால், நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த சொத்து உங்களது குழந்தைகளுக்கு போகாது. அதனை காங்கிரஸ் பறித்துக் கொள்ளும். ‛ மக்கள் வாழும் போதும், இறந்த பிறகும் கொள்ளையடிக்க வேண்டும் ' என்பது தான் காங்கிரசின் தாரக மந்திரம் என்றார்.
அம்பலம்
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: சாம்பித்ரோடாவின் கருத்துக்கு பிறகு காங்கிரஸ் முற்றிலும் அம்பலப்பட்டு விட்டது. முதலில் கணக்கெடுப்பு நடத்துவோம் என அவர்கள் தங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தனர். நாட்டின் வளங்களை பகிர்ந்து அளிப்பதில் சிறுபான்மையினருக்கே முன்னுரிமை என மன்மோகன் சிங் கூறி இருக்கிறார். தற்போது அமெரிக்காவில் தனியார் சொத்தில் 55 சதவீதத்தை அரசு எடுத்துக் கொள்கிறது. இது நியாயமானது என காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவரான சாம் பித்ரோடா கூறி உள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி கேள்வி எழுப்பிய போது, மக்களின் சொத்துகளை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என சோனியா, ராகுல் உட்பட ஒட்டு மொத்த காங்கிரஸ் கட்சியும் கூறியது. ஆனால் சாம் பித்ரோடாவின் கருத்து காங்கிரஸ் கட்சியின் நோக்கத்தை தெளிவுபடுத்திவிட்டது. நாட்டு மக்களின் தனிச் சொத்தை கணக்கெடுத்து அதை அரசு சொத்தாக மாற்றி, முந்தைய ஐ.மு., கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அதாவது நாட்டின் வளத்தில் சிறுபான்மையினருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பகிர்ந்து அளிக்க விரும்புகிறார்கள்.
ஒன்று தனியார் சொத்துகளை பகிர்ந்தளிக்கும் திட்டம் தங்களுக்கு இருப்பதாக காங்கிரஸ் ஒத்துக் கொள்ள வேண்டும். அல்லது காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் உள்ள அந்தக் கருத்தை திரும்பப் பெற வேண்டும். சாம் பித்ரோடாவின் கருத்தை மக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் நோக்கம் தற்போது வெளிப்பட்டு விட்டது. மக்கள் இதனை அறிவுப்பூர்வமாக அணுக வேண்டும் என்றார்.
பா.ஜ.,வைச் சேர்ந்த அமித் மாளவியா வெளியிட்ட அறிக்கையில், ‛‛ காங்கிரஸ் இந்த தேசத்தை அழிக்க முடிவு செய்துவிட்டது. இப்போது சாம் பித்ரோடா 50 சதவீத பரம்பரை வரி பற்றி பேசுகிறார். அப்படி என்றால் நாம் நமது கடின உழைப்பு மூலம் உருவாக்கும் சொத்தில் 50 சதவீதம் எடுத்துக் கொள்ளப்படும். நாம் செலுத்தும் வரிகளுக்கு அப்பால் இதுவும் எடுத்துக் கொள்ளப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இது நடக்கும் எனக்கூறியுள்ளார்
விவாதம்
சாம் பித்ரோடாவின் இந்த கருத்துக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இது விவாதப் பொருளானது. இதனையடுத்து அவரது கருத்துக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.
தனிப்பட்ட கருத்து
இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சாம் பித்ரோடா சிறந்த ஆலோசகர், நண்பர். உலகம் முழுவதும் என்னை உட்பட பலரை வழிநடத்தி வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்கு பல பங்களிப்பை அளித்து உள்ளார். அவர், காங்கிரஸ் அயலக அணியின் தலைவர். அவரது கருத்துகளை வலிமையாகவும், வெளிப்படையாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக நாட்டில், தனி நபர் ஒருவர் தனது தனிப்பட்ட கருத்து குறித்து விவாதிக்கவும், வெளியில் கூறவும், ஆலோசிக்கவும் சுதந்திரம் உள்ளது. பித்ரோடாவின் கருத்துகள் காங்கிரசின் நிலைப்பாட்டை எப்போதும் பிரதிபலிக்கின்றன என்று அர்த்தம் இல்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பரம்பரை வரி கொண்டு வரும் என சாம் பித்ரோடா கூறவில்லை. அவ்வாறு காங்கிரசின் தேர்தல் அறிக்கையிலும் இல்லை. என்றார்.
நம்பிக்கை இல்லை
காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாதே கூறுகையில், பரம்பரை வரி என்பதில் காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை. அது பற்றி விவாதிக்கவும் இல்லை. பா.ஜ., இது பற்றி பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. உண்மையில், பிரதமர் மோடி, அருண் ஜெட்லி ஆகியோர் தான் இது பற்றி சிந்தித்தார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

