ஊடுருவல்காரர்கள்தான் அவர்களின் ஓட்டு வங்கி; காங்கிரஸ் மீது அமித்ஷா பாய்ச்சல்
ஊடுருவல்காரர்கள்தான் அவர்களின் ஓட்டு வங்கி; காங்கிரஸ் மீது அமித்ஷா பாய்ச்சல்
ADDED : ஆக 08, 2025 05:03 PM

பாட்னா: ராகுல் மற்றும் அவரது கட்சியின் முக்கிய ஓட்டு வங்கியாக ஊடுருவல்காரர்கள் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.
பீஹாரின் சீதாமர்ஹியில், நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: தேஜஸ்வி யாதவின் தந்தையும் தாயும் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்தனர். அவர்கள் மாநில வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள்? மத்திய அமைச்சராக இருந்த போது லாலு, பீஹாரில் ரயில்வே உள்கட்டமைப்பிற்காக ரூ.1,132 கோடியை வழங்கினார். அதே நேரத்தில் எங்கள் அரசு ரூ.10,066 கோடியை வழங்கியது.
தேசிய பாதுகாப்பு
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி நடந்தது. அவர்களைக் கேள்வி கேட்கக்கூட யாரும் இல்லை.ஓட்டு வங்கி அரசியலுக்காக தேசிய பாதுகாப்பை சமரசம் செய்தனர். குண்டுவெடிப்புகள் நாட்டையே உலுக்கின. பயங்கரவாதிகள் பயமே இல்லாமல் தாக்குதல் நடத்தி விட்டு பாகிஸ்தானுக்கு ஓடி விட்டனர். இதற்கு நேர்மாறாக, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா கடும் பதிலடி கொடுத்தது.
பயங்கரவாதிகளை ஒழித்தோம்!
உரி தாக்குதலுக்குப் பிறகு, நாங்கள் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினோம். புல்வாமாவுக்குப் பிறகு, நாங்கள் ஒரு வான்வழித் தாக்குதலை நடத்தினோம். மேலும் பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகு, நாங்கள் ஆப்பரேஷன் சிந்தூரைத் தொடங்கி பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாதிகளை ஒழித்தோம்.
வாக்காளர் பட்டியல்
பீஹாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது ஊடுருவல்காரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ராகுல் அரசியலில் ஈடுபடுகிறார். ராகுல் மற்றும் அவரது கட்சியின் முக்கிய வாக்கு வங்கியாக ஊடுருவல்காரர்கள் இருக்கின்றனர். இவ்வாறு அமித்ஷா பேசினார்.