இந்திய வம்சாவளி பொருளாதார நிபுணர் மேக்நாத் தேசாய் மரணம்
இந்திய வம்சாவளி பொருளாதார நிபுணர் மேக்நாத் தேசாய் மரணம்
ADDED : ஜூலை 31, 2025 12:31 AM

புதுடில்லி: குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் மேக்நாத் தேசாய், 85. 'ஹவுஸ் ஆப் லார்ட்ஸ்' எனப்படும், பிரிட்டன் மேல்சபை உறுப்பினரான இவர், ஹரியானாவின் குருகிராமில் நேற்று முன்தினம் காலமானார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேசாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக லண்டனில் உள்ள அவரது மனைவி கிஷ்வார் தேசாய் தெரிவித்தார்.
மும்பை மற்றும் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலையில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற இவர், பிரிட்டன் சென்று அங்குள்ள, 'லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்'ல் 1965 முதல் 2003 வரை பேராசிரியராக பணியாற்றினார்.
பத்மபூஷன் விருது பெற்றுள்ளார். இவர் 1971ல் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார்.
பின் 1991ல் பிரிட்டன் மேல்சபை உறுப்பினரானார். 2020ல் அந்த கட்சியில் இருந்து தேசாய் விலகினார். பின்னர், 'ஹவுஸ் ஆப் லார்ட்ஸ்'ல் கட்சி சார்பற்ற உறுப்பினரானார்.

