இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்புத்திறன் அதிகரிப்பு: விமானப்படை துணை தளபதி பெருமிதம்!
இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்புத்திறன் அதிகரிப்பு: விமானப்படை துணை தளபதி பெருமிதம்!
ADDED : ஆக 30, 2025 06:57 PM

புதுடில்லி: 'நமது வான் பாதுகாப்புத்திறன் அதிகரித்திருப்பது, ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையில் உறுதி செய்யப்பட்டது,' என விமானப்படை துணை தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்தார்.
ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி பேசியதாவது: கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் ராணுவ இலக்குகள் மீது இந்திய விமானப்படை 50க்கும் குறைவான ஆயுதங்களை ஏவியதால், மே 10ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் நம்மிடம் போர் நிறுத்தம் கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நாம் எதிர்பார்ப்பது போலவே, வான் பாதுகாப்பு திறனின் பெருமளவில் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் சுதர்சன சக்கரம் எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பு நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். 1971ம் ஆண்டு நடந்த போரின் போது கூட அழிக்கப்படாத இலக்குகள் அழிக்கப்பட்டன. அந்த அளவிற்கு நாம் அவர்களுக்கு சேதம் விளைவித்தோம்.
ஒவ்வொரு ஆயுதமும் சரியான இலக்கைத் தாக்குவதை உறுதி செய்வது முழு குழுவின் முயற்சியாகும். பல ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை விட ஒரு புகைப்படம் பேசிவிடும். முக்கிய பயங்கரவாத தலைவர்களின் இறுதிச் சடங்கில், பாகிஸ்தான் உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர். இது, பாகிஸ்தான் அரசு, நேரடியாக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்பதற்கான சாட்சி. இவ்வாறு ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்தார்.