ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது: முப்படை தலைமை தளபதி சவுகான் திட்டவட்டம்
ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது: முப்படை தலைமை தளபதி சவுகான் திட்டவட்டம்
ADDED : ஆக 26, 2025 12:13 PM

போபால்: ''ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இருந்து நிறைய பாடம் கற்றுக்கொண்டோம். இந்த ராணுவ நடவடிக்கை தொடர்கிறது'' என முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் பேசியதாவது: இந்தியா புத்தர், மகாவீர் ஜெயின் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் பூமியாக இருந்து வருகிறது. அனைவரும் அகிம்சையின் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால் அமைதியாக இருப்பது அவ்வளவு எளிதல்ல.
பாதுகாப்பு படையினர் பண்டைய காலங்கள் போலவே ஒரு அறிஞராகவும், போர்வீரராகவும் செயல்பட வேண்டும். ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் மாதிரி தான். இது ஒரு நவீன கால மோதல். அதில் இருந்து நாம் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டோம். அவற்றில் பெரும்பாலானவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சில செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் தொடர்கிறது. இவ்வாறு அனில் சவுகான் பேசினார்.