இந்தியாவுக்கு என தனித்துவமான ஏஐ தேவை: பிரதமர் மோடி வலியுறுத்தல்
இந்தியாவுக்கு என தனித்துவமான ஏஐ தேவை: பிரதமர் மோடி வலியுறுத்தல்
ADDED : ஜன 08, 2026 06:52 PM

புதுடில்லி: '' இந்தியாவுக்கு என தனித்துவமான ஏஐ மாதிரிகளை உருவாக்க வேண்டும்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டில்லியில் உள்ள தனது இல்லத்தில் ஏஐ குறித்த 12 ஸ்டார்ட் அப் நிறுவவனங்களுடனான வட்ட மேஜை மாநாட்டில், அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அடுத்த மாதம் டில்லியில் நடக்கும் AI for ALL: Global Impact Challenge-க்கு தகுதி பெற்ற 12 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றன.
அப்போது அவர்கள், '' இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதில் இந்தியாவின் அர்ப்பணிப்பை பாராட்டினர். மேலும் ஏஐ கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாட்டுக்கான மையமாக இந்தியா மாற துவங்கியுள்ளதாக தெரிவித்த அவர்கள், ஏஐ துறையின் வளர்ச்சிமற்றும் பரந்த எதிர்கால ஆற்றலையும் எடுத்துக்காட்டினர்.
அவர்களுடன் கலந்துரையாடும் போது பேசிய பிரதமர் மோடி, ஏஐ சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும் அடுத்த மாதம் ஏஐ குறித்த உச்சி மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. இதன் மூலம் தொழில்நுட்பத் துறையில் நாடு முக்கிய பங்கு வகிக்கும். ஏஐ பயன்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்த இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, உலகத்திற்காக தயாரிக்கப்பட்டது என்ற உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு தனித்துவமான ஏஐ மாதிரியை இந்தியா உலகிற்கு வழங்க வேண்டும். இந்தியா மீதான உலகத்தின் நம்பிக்கையே நாட்டின் மிகப்பெரிய பலம்.
இந்திய ஏஐ மாதிரிகள் நெறிமுறைசார்ந்தவை, பாரபட்சமற்றவை, வெளிப்படைத்தன்மை கொண்டவை மற்றும் தரவு தனியுரிமைக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் இருந்து உலகளாவிய தலைமையை நோக்கி ஸ்டார்ட்அப்கள் செயல்பட வேண்டும். இந்திய ஏஐ மாதிரிகள் தனித்துவமாக இருக்க வேண்டும் என்றும், உள்ளூர் மற்றும் பிராந்திய மொழிகளை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தை சேர்ந்த இளைஞர்களுடன் AI பற்றிப் பேசினேன். இது ஒரு மறக்கமுடியாத உரையாடலாக இருந்தது. அதில் அவர்கள், AI உலகத்தை இந்தியா எவ்வாறு மாற்றுகிறது என்பது குறித்த தங்கள் பார்வையையும் பணியையும் பகிர்ந்து கொண்டனர். இந்த ஸ்டார்ட்அப்கள் மின் வணிகம், சந்தைப்படுத்தல், பொறியியல் உருவகப்படுத்துதல்கள், பொருள் ஆராய்ச்சி, சுகாதாரம், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பல துறைகளில் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பாராட்டத்தக்கது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் இணையமைச்சர் ஜிதின் பிரசாதா ஆகியோரும் உடனிருந்தனர்.

